சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலினை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்துப் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசி திருவிழா கட்டபொம்மன் மண்டகப்படி தொடர்பான கோரிக்கையை அவர் முதலமைச்சரிடம் முன்வைத்தார்.
பாஞ்சாலங்குறிச்சி மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் முன்னோர்களால் 500 ஆண்டுகளுக்கும் மேலாக திருச்செந்தூரில் பராமரிக்கப்பட்டு வரும் கட்டபொம்மன் மடம் , முருகப் பெருமானின் 9-வது மண்டகப்படியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த மடத்தை இத்தனை ஆண்டுகள் கட்டபொம்மன் மண்டகப்படிக்கு பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது அங்கு மண்டகப்படி நடத்த அறநிலையத்துறை இணை ஆணையர் தடை விதித்துள்ளார். இதற்குப் பதிலாக அருகில் உள்ள சிவன் கோயிலில் நிகழ்ச்சியை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கட்டபொம்மனின் நேரடி வாரிசான வீமராஜா (எ) ஜெகவீரபாண்டிய சுப்பிரமணிய கட்டபொம்முதுரை அவர்களின் உடல்நலக்குறைவைப் பயன்படுத்தி, மற்றொரு தரப்பினர் தவறான தகவல்களை அளித்து இந்தத் தடையைப் பெற்றுள்ளதாக வைகோ சுட்டிக்காட்டினார்.
நாளை மார்ச் 1-ம் தேதி திருச்செந்தூர் கோயிலில் மண்டகப்படி நடைபெற உள்ளதால், இணை ஆணையரின் தடையை ரத்து செய்து, வழக்கம்போல கட்டபொம்மன் மடத்திலேயே மண்டகப்படி நடத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்.
வைகோவின் கோரிக்கையை கனிவுடன் கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
தனது தனிச் செயலாளரை அழைத்து, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபுவிடம் இது குறித்து உடனடியாகத் தெரிவிக்க உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
மேலும், ஒன்பது கம்பளத்தைச் சார்ந்த மக்களின் உணர்வுகள் இதனால் புண்பட்டுள்ளன. எனது கோரிக்கையை ஏற்ற முதலமைச்சர், உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். அறநிலையத்துறை அமைச்சர் மூலம் இந்த ஆணை திரும்பப் பெறப்படும் என்றும், கட்டபொம்மன் வம்சாவழிகள் கோரிக்கை நிறைவேறும் என்றும் நம்புகிறேன் என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பை முடித்துவிட்டு, வேலூர் மண்டல நிதி அளிப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வைகோ திருப்பத்தூர் விரைந்தார்.



