• vilasalnews@gmail.com

தமிழக ரேஷன் கடைகளில் கட்டாய விற்பனை... பொதுமக்கள் புகார் - அதிகாரிகள் கடும் எச்சரிக்கை!

  • Share on

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இயங்கும் நியாயவிலைக் கடைகளில், அத்தியாவசியப் பொருட்களைப் பெற வரும் குடும்ப அட்டைதாரர்களிடம் தேவையற்ற பொருட்களை வாங்குமாறு ஊழியர்கள் வற்புறுத்துவதாகப் புகார்கள்  எழுந்துள்ளன.


தமிழகம் முழுவதும் சுமார் 35,000-க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், அரிசி, பருப்பு, எண்ணெய் மற்றும் சர்க்கரை போன்ற பொருட்களை வாங்கச் செல்லும் மக்களிடம், கூடுதல் நிபந்தனைகள் விதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.


கடையில் இருப்பு உள்ள டீ தூள், சோப்பு, மசாலா பாக்கெட்டுகள் அல்லது பருப்பு வகைகளை வாங்கினால் மட்டுமே மற்ற பொருட்கள் வழங்கப்படும் என ஊழியர்கள் வற்புறுத்துகின்றனர். குறைந்தபட்சம் 100 ரூபாய்க்குப் பொருட்களை வாங்க வேண்டும் என்று சில இடங்களில் கெடுபிடி காட்டப்படுவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் இத்தகைய முறைகேடுகள் அதிக அளவில் நடைபெறுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இது குறித்து இல்லத்தரசிகள் கூறுகையில், விலைவாசி உயர்வால் சிரமப்படும் எங்களுக்குத் தேவையற்ற பொருட்களை வாங்குவது கூடுதல் சுமையைத் தருகிறது. இதுபற்றிக் கேட்டால், தங்களுக்கு மேலிடத்திலிருந்து 'டார்கெட்' கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனை முடிப்பதற்காகவே இவ்வாறு செய்வதாகவும் ஊழியர்கள் பொறுப்பற்ற முறையில் பதிலளிக்கின்றனர், என்கின்றனர். 


இப்புகார் தொடர்பாக கூட்டுறவுத் துறை அதிகாரிகளோ, ரேஷன் கடைகளில் எந்தவொரு பொருளையும் வாடிக்கையாளரிடம் வற்புறுத்தி விற்கக் கூடாது. விருப்பமுள்ளவர்கள் மட்டுமே கூடுதல் பொருட்களை வாங்கலாம். விதிகளை மீறும் ஊழியர்கள் மீது ஆதாரத்துடன் புகார் அளித்தால், அவர்கள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கின்றனர்.


ரேஷன் கடைகளில் முறைகேடுகள் நடந்தாலோ அல்லது ஊழியர்கள் உங்களைக் கட்டாயப்படுத்தினாலோ, கட்டணமில்லா எண் 1967, நுகர்வோர் பாதுகாப்புத் துறை1800 425 5901, வாட்ஸ்அப் புகார் 94454 64748 (புகைப்படம்/வீடியோ அனுப்பலாம்)மொபைல் ஆப்TNPDS ஆப் இணையதளம் www.tnpds.gov.in ஆகியவற்றில் பொதுதுமக்கள் அளிக்கலாம். புகார் அளிக்கும் போது உங்கள் குடும்ப அட்டை எண் மற்றும் சம்பந்தப்பட்ட கடையின் குறியீட்டு எண் ஆகியவற்றைத் தயாராக வைத்துக்கொள்ளுங்கள். புகார் அளித்த சில தினங்களிலேயே வட்ட வழங்கல் அலுவலர் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு உறுதி அளித்துள்ளது.

  • Share on

தமிழக அரசியலில் 'பெண்'களே கிங் மேக்கர்: இறுதி வாக்காளர் பட்டியல் சொல்லும் அதிரடித் தகவல்!

நல்லகண்ணு காலமானார்!

  • Share on