தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று 3 வது கட்டமாக கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்தார். விஜய்யை பார்ப்பதற்காகவும் அவரது பேச்சைக் கேட்பதற்காகவும் ஏராளமான ரசிகர்களும், தொண்டர்கள் வந்த நிலையில் அப்பகுதியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 39 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பிரச்சார நிகழ்வுக்கு காவல் துறை மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஏராளமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால், போலீஸ் மற்றும் தவெக சார்பில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் முழுமையாகப் பின்பற்றப்பட்டதா, அப்படி பின்பற்றப்பட்டிருந்தால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததற்கான காரணம் என்ன என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கரூர் விஜய் கூட்டத்திற்கு சுமார் 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்று தவெகவினர் கூறியிருந்தனர். ஆனால் அதிகளவு கூட்டம் கூடியது. ஒரு கட்டத்தில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 39 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
பிரச்சார நிகழ்வுக்கு காவல் துறை மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஏராளமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால், போலீஸ், தவெக சார்பில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் முழுமையாகப் பின்பற்றப்பட்டதா, அப்படி பின்பற்றப்பட்டிருந்தால் இந்த துயர சம்பவம் நிகழ்ந்ததற்கான காரணம் என்ன என்ற கேள்விவும் எழுந்துள்ளது.
கரூா் மாவட்ட காவல் துறையினா் விதித்திருந்த நிபந்தனைகள்:
பிரச்சாரம் நடைபெறும் பகுதியில் டிராஃபிக் ஜாம் ஏற்படாத வகையில் கூட்டத்தை நடத்த போலீஸாருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சென்டர் மீடியன்களின் மீது ஏறக் கூடாது. மின்வாரியத்தில் முழுமையான அனுமதி பெற வேண்டும். பரப்புரை நடைபெறும் பகுதி மக்கள் ஏராளமானோர் வந்து செல்லும் பகுதி என்பதால் முதலுதவிக்கான முன்னேற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும்.
கூட்டத்தில் அவசர ஊா்தி வந்தால் அதற்கு வழிவிட வேண்டும். பொதுமக்களை சந்திக்கும் நிகழ்ச்சிக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. திருக்காம்புலியூா் ரவுண்டானா பகுதி முக்கிய இணைப்பு சாலை என்பதால் ரோடு ஷோ போன்றவற்றை நடத்தக் கூடாது உள்ளிட்ட 11 நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்த விதிமுறைகளை மீறினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தவெக சார்பில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள்:
விஜயின் பிரச்சார நிகழ்ச்சிக்கு கா்ப்பிணிகள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவா்கள், உடல்நலம் குன்றியோா், பள்ளிச் சிறுவா், சிறுமியா், மாற்றுத் திறனாளிகள் கலந்துகொள்ளக் கூடாது. போலீஸாரின் அறிவுறுத்தலின்படி வரவேற்கும் நடவடிக்கைகளை கட்சியினர் தவிர்க்க வேண்டும். விஜய்யின் பிரச்சார வாகனத்தை யாரும் வாகனங்களில் பின்தொடர கூடாது. கட்டடங்கள், சுவர்கள், மரங்கள், மின் விளக்கு கம்பம், கொடிக் கம்பங்கள், கிரில் கம்பிகள், தடுப்புகள் ஆகியவற்றின் அருகில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
போக்குவரத்துக்கு இடையூறு அளிக்கும் வகையில் வாகனங்களை நிறுத்தக் கூடாது. மாணவர்கள், பெண்கள், குழந்தைகள், வாகன ஓட்டிகள், முதியவர்கள், நோயாளிகள் உள்ளிட்டோருக்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தாத வகையில் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும். காவல் துறையின் விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தைனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
போலீஸார் தரப்பிலும், தவெக சார்பிலும் இத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்த நிபந்தனைகள் சரியாக பின்பற்றப்பட்டதா, கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த காவல் துறையினர் என்ன நடவடிக்கை மேற்கொண்டனர். பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் பவர்கட் செய்யப்பட்டது ஏன். கரூரில் எத்தனையோ விரிவான திறந்தவெளி பகுதிகள் இருக்கும்போது மக்கள் சிரமப்படுவார்கள் என்று தெரிந்தே குறுகிய பகுதிகள் கொடுக்கப்பட்டது ஏன் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இச்சம்பவம் தொடர்பாக தகுந்த விசாரணை மேற்கொண்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.



