தமிழ்நாட்டின் வாழ்வாதாரம் காக்க வலியுறுத்தி இன்று ( ஆக.,9 ) முதல் வைகோ தூத்துக்குடியில் இருந்து பிரச்சார பயணத்தை தொடங்குகிறார். வரும் 20 ஆம் தேதி சென்னையில் பயணத்தை முடிக்கிறார்.
இது குறித்து மதிமுக தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தின் 8 இடங்களில் தமிழ்நாட்டின் வாழ்வாதாரத்தை காக்க, ஜனநாயகத்தை பாதுகாக்க, மதச்சார்பின்மையை நிலைநிறுத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் பிரச்சார கூட்டங்கள் இன்று ஆகஸ்ட் 9 ஆம் தேதி தூத்துக்குடியில் தொடங்குகிறது. இந்த பிரச்சாரக் கூட்டம் ஆகஸ்ட் 20ஆம் தேதி சென்னையில் நிறைவடைகிறது.
அதன்படி இன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் வெளியேற்றம் என்ற தலைப்பில் பிரச்சார கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்திற்காக காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வரும் வைகோவிற்கு தூத்துக்குடி மதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். பின்னர் தூத்துக்குடியில் தனியார் விடுதியில் தங்கி கட்சியினரை சந்திக்கிறார்.
பின்னர் மாலை 6:00 மணி அளவில் தூத்துக்குடி சிதம்பரநகர் பேருந்து நிறுத்தம் அருகில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
தொடர்ந்து வைகோ பங்கேற்கும் பிரச்சார கூட்டமானது ஆகஸ்ட் 10ஆம் தேதி கடையநல்லூரில் மதச்சார்பின்மையும் கூட்டாட்சியும் என்ற தலைப்பிலும், 11ஆம் தேதி கம்பத்தில் முல்லை பெரியாரும் நியூட்ரினோவும் என்ற தலைப்பிலும், 12ம் தேதி திண்டுக்கல்லில் விவசாயிகள், மீனவர்கள் துயரம் என்ற தலைப்பிலும் நடக்கிறது.
13ம் தேதி கும்பகோணத்தில் மேகதாதுவும் மீத்தேனும் என்ற தலைப்பிலும், 14ஆம் தேதி நெய்வேலியில் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் என்ற தலைப்பிலும், 18 ஆம் தேதி கோவை சூலூரில் இந்தி ஏகாதிபத்தியம் என்ற தலைப்பிலும், 20ஆம் தேதி சென்னை திருவான்மியூரில் சமூக நீதியும் திராவிட இயக்கமும் என்ற தலைப்பிலும் பிரச்சார கூட்டங்கள் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டங்களில் வைகோ தலைமை உரையாற்றுகிறார். அதே போன்று அனைத்து கூட்டங்களிலும் மதிமுக பொருளாளர் மு.செந்திலதிபன், கவிஞர் மணிவேந்தன் ஆகியோர் உரையாற்றுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது



