• vilasalnews@gmail.com

கல்லாப்பெட்டி கூட்டணிதான் முக்கியமா? - தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் திமுக அரசை வறுத்தெடுத்த விஜய்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் பகுதியில் 12-ஆம் வகுப்பு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழக அரசை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- 


தமிழகத்தில் கடந்த சில நாட்களாகப் பெண்களுக்கு எதிரான வன்முறைகளும், குற்றச் சம்பவங்களும் அதிகரித்து வருவதாகக் கூறி, திமுக அரசுக்குத் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய். குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் (விளாத்திக்குளம்) பகுதியில் பள்ளி மாணவி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த ஒன்றரை வாரத்தில், மதுராந்தகம் அருகே 14 வயதுச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது, கிருஷ்ணகிரியில் சிறுமி படுகொலை மற்றும் 60 வயது மூதாட்டி மீதான வன்கொடுமை போன்ற சம்பவங்கள் மனிதநேயமற்றவை என்று அவர் சாடியுள்ளார்.


நாங்குநேரி, சிவகங்கை, மானாமதுரை பகுதிகளில் நடந்த அரிவாள் வெட்டுச் சம்பவங்கள் மற்றும் நாமக்கல்லில் 7 வயது சிறுமி கடத்தப்பட்ட விவகாரத்தைச் சுட்டிக்காட்டி, பொதுமக்களுக்குப் பாதுகாப்பு எங்கே? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.


கோவையில் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் அலட்சியம் காட்டியது மற்றும் சென்னை காசிமேட்டில் திமுக நிர்வாகியின் அத்துமீறல் போன்ற நிகழ்வுகள் அரசின் தோல்வியைக் காட்டுவதாக அவர் விமர்சித்துள்ளார்.


தமிழகத்தில் பச்சிளம் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை யாருக்கும் பாதுகாப்பில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. சட்டம் ஒழுங்கைக் காப்பதில் திமுக அரசு முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது.


முதலமைச்சர் ஸ்டாலினை நேரடியாக விமர்சித்துள்ள விஜய், அரசு தனது கூட்டணிக் கணக்குகளிலும், தேர்தல் வெற்றிகளிலும் காட்டும் அக்கறையைப் பொதுமக்களின் பாதுகாப்பில் காட்டவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். "தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே கவனம் செலுத்தும் முதலமைச்சர், தமிழகப் பெண்களின் பாதுகாப்பில் மௌனம் காப்பது ஏன்?" என்று அவர் வினவியுள்ளார்.


மேலும், இந்த வரிசையான வன்முறைச் சம்பவங்கள் தமிழக மக்களின் மனங்களை உலுக்கியிருப்பதாகவும், பொறுப்பற்ற முறையில் செயல்படும் இந்த ஆட்சிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார்.

  • Share on

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தவெக? எடப்பாடி பழனிசாமி சொன்ன முக்கிய விஷயம்!

  • Share on