• vilasalnews@gmail.com

விருதுநகர் அரசியலில் ராஜேந்திர பாலாஜி கணக்கு பலித்ததா?

  • Share on

விருதுநகர் மாவட்ட அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் சமீபத்திய அரசியல் நகர்வுகள், அவரது ஆதரவாளர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. சாத்தூர் மற்றும் ராஜபாளையம் ஆகிய இரு தொகுதிகளிலும் அவர் மேற்கொண்டுள்ள வியூகம், "ஒரே கல்லில் இரண்டு மாங்காய்" அடித்த கதையாகப் பேசப்பட்டு வருகிறது.


விருதுநகர் மாவட்டத்தைப் பொறுத்தவரை அதிமுகவின் முக்கிய முகமாக ராஜேந்திர பாலாஜி விளங்குகிறார். விருதுநகர் மட்டுமல்லாது தென்காசி மாவட்ட அரசியலிலும் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதில் அவர் உறுதியாக உள்ளார். முன்னதாக, முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முதல் தற்போது கௌதமி வரையிலான மோதல்கள் வரை அனைத்திலும் தனது அரசியல் பிடியைத் தளர்த்தாமல் கையாண்டு வருகிறார்.


நடிகை கௌதமி கடந்த முறை ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத விரக்தியில் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இந்தச் சூழலில், ராஜபாளையம் தொகுதியை ஜான் பாண்டியனுக்கு ஒதுக்க சம்மதித்ததன் மூலம், கௌதமியின் அரசியல் கணக்குகளுக்கு ராஜேந்திர பாலாஜி முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகக் கருதப்படுகிறது. இது கௌதமி ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்தாலும், ராஜேந்திர பாலாஜி தரப்பினர் இதை ஒரு ராஜதந்திரமாகவே பார்க்கின்றனர்.


மறுபுறம் சாத்தூர் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ ராஜவர்மன் தீவிரமாகப் பணியாற்றி வந்தார். எடப்பாடி பழனிசாமியின் பிரசாரப் பயணத்தை முன்னின்று நடத்திய ராஜவர்மன், மீண்டும் அங்கே போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், அவருக்கும் ராஜேந்திர பாலாஜிக்கும் இடையே நிலவும் பழைய கருத்து வேறுபாடுகள் காரணமாக, அத்தொகுதி பாஜக வசம் செல்ல ராஜேந்திர பாலாஜியின் அரசியல் நகர்வுகளே காரணம் என அவரது ஆதரவாளர்கள் வெளிப்படையாகப் பேசி வருகின்றனர்.


அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ கோபால்சாமி, ராஜேந்திர பாலாஜி சிவகாசிக்கு மாறுவதால் தனக்கு ராஜபாளையம் கிடைக்கும் என நம்பியிருந்தார். ஆனால் அங்கே ஜான் பாண்டியனும், சாத்தூரில் பாஜகவும் களம் இறக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதால், கோபால்சாமியின் கணக்குகளும் தடம் மாறியுள்ளன.


விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களின் தவிர்க்க முடியாத பவர் சென்டராக ராஜேந்திர பாலாஜி மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்தத் தேர்தல் முடிவுகள் அவரது அரசியல் செல்வாக்கை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


  • Share on

திமுக கூட்டணியில் விரிசல்? கட்சி தலைவரின் அறிவிப்பால் பரபரப்பு!

திமுக மாவட்டச் செயலாளர் பதவிக்காக தவெக-வை குறிவைத்து காய் நகர்த்தும் நிர்வாகிகள்!

  • Share on