திருச்சி பஞ்சப்பூர் மாநாட்டு மேடையில் பிரதமர் மோடியும், எடப்பாடி பழனிசாமியும் கைகுலுக்கிய அந்தத் தருணம், வெறும் தேர்தல் அரசியலுக்கான தொடக்கமாகவே பார்க்கப்பட்டது. ஆனால், அந்தப் புன்னகைக்கு பின்னால் அதிமுகவின் அஸ்திவாரத்தையே அசைத்துப் பார்க்கும் அளவிற்கான ஒரு மாபெரும் அரசியல் வியூகம் ஒளிந்திருக்கும் என எடப்பாடி பழனிசாமி சற்றும் எதிர்பார்க்கவில்லை. இப்போது கோட்டைக்கும் டெல்லிக்கும் இடையே நடக்கும் இந்த அதிகாரப் போட்டியில், அதிமுகவின் எதிர்காலம் ஒரு நூலிழையில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது.
அண்ணா, கலைஞர், ஜெயலலிதா போன்ற ஆளுமைகள் தமிழ்நாட்டை ஆண்டவரை, தேசியக் கட்சிகள் திராவிடக் கட்சிகளின் நிழலில் மட்டுமே ஒதுங்க முடிந்தது. "ஆட்சியில் பங்கு" என்ற வார்த்தைக்கு அன்று இடமே இல்லை. ஆனால், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவுகள் பாஜகவிற்கு ஒரு கதவைத் திறந்துவிட்டுள்ளது. ஒன்றரை கோடி தொண்டர்களைக் கொண்ட ஒரு மாபெரும் இயக்கத்தின் பலவீனத்தைப் பயன்படுத்தி, தமிழகத்தில் 'தாமரை'யை நிலைநிறுத்த பாஜக தலைமை காய்நகர்த்தி வருகிறது.
சமீபத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையிலான சந்திப்பு, வெறும் தொகுதிப் பங்கீட்டிற்கானது என்று வெளியில் சொல்லப்பட்டாலும், உள்ளே நடந்த விவாதங்கள் மிகவும் 'அதிரடி' ரகம் என்கின்றன அரசியல் வட்டாரங்கள். வடமாநிலங்களில் பாஜக வெற்றிகரமாகச் செயல்படுத்தி வரும் பார்ட்னர்ஷிப் மாடலைத் தமிழகத்திலும் திணிக்க அமித்ஷா தரப்பு அழுத்தம் கொடுப்பதாகத் தெரிகிறது.
தேர்தலில் வெற்றி பெற்றால் ஆட்சியில் சரிபாதி பங்கு அல்லது சுழற்சி முறையில் முதலமைச்சர் பதவி என்பதே பாஜகவின் திட்டம். இது அதிமுக மேலிடத்தை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. எடப்பாடியை இன்னும் அதிக அளவில் 'அப்செட்' ஆக்கிய விஷயம், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து பாஜக காட்டும் அதீத ஆர்வம். அதிமுகவின் வாக்கு வங்கியை விஜய் பிரிப்பார் என்று தெரிந்தே, அவருக்கு பாஜக சிவப்பு கம்பளம் விரிப்பது, எடப்பாடிக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவின் இந்த பார்ட்னர்ஷிப் திட்டம், தனது அரசியல் எதிர்காலத்திற்கே வைக்கப்பட்ட உலை என்று அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் அச்சப்படுகின்றனர். தமிழக அரசியலைப் பொறுத்தவரை, திராவிட இயக்கங்கள் தன்னாட்சி அதிகாரத்தில் என்றுமே சமரசம் செய்துகொண்டதில்லை. இப்போது முன்வைக்கப்படுவதாகக் கூறப்படும் இந்த கூட்டு ஆட்சி முறை, அதிமுக போன்ற ஒரு வலிமையான கட்டமைப்பைக் கொண்ட கட்சிக்கு தற்கொலைக்குச் சமமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. தொண்டர்கள் மத்தியில் இது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தலாம்.
இருப்பினும், தற்போதைய சூழலில் ஆளும் தரப்பை எதிர்க்க ஒரு வலுவான கூட்டணி தேவை என்பதையும் மறுப்பதற்கில்லை. பாஜகவின் இந்த வியூகம் அதிமுகவைப் பலவீனப்படுத்துமா? அல்லது விஜய்யை உள்ளே இழுப்பதன் மூலம் ஒரு புதிய அரசியல் சமன்பாடு உருவாகுமா? என்பது வரும் மாதங்களில் தெரிந்துவிடும்.
எடப்பாடி பழனிசாமி எடுக்கப்போகும் அந்த ஒரு முடிவு, அவரது தனிப்பட்ட அரசியல் வாழ்வை மட்டுமின்றி, அதிமுக என்ற பேரியக்கத்தின் அடையாளத்தையும் தீர்மானிக்கும் காரணியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

