சமீபத்தில் திமுக மாணவரணி செயலாளர் பதவியிலிருந்து ராஜீவ் காந்தி மாற்றப்பட்டு, அவருக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டது திமுக உட்கட்சி அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாற்றத்தின் பின்னணியில் திமுக எம்பி கனிமொழியின் தலையீடு மிக முக்கியமாக இருந்ததாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்த ராஜீவ் காந்தி, தனது பேச்சாற்றலால் குறுகிய காலத்திலேயே மாணவரணி செயலாளர் பதவியைப் பிடித்தார். இருப்பினும், அவர் மீது பல்வேறு புகார்கள் திமுக தலைமைக்குச் சென்ற வண்ணம் இருந்தன. குறிப்பாக, திருச்சி மாநாட்டிற்கு முன்பே மாணவரணி நிர்வாகிகளிடமிருந்து வந்த குற்றச்சாட்டுகளை கனிமொழி கையில் எடுத்ததாகக் கூறப்படுகிறது. நிர்வாகிகளின் அதிருப்தியை முதல்வர் ஸ்டாலினிடம் நேரடியாகவும் வெளிப்படையாகவும் கனிமொழி விவரித்ததே, இந்த மாற்றத்திற்கான தொடக்கப்புள்ளி எனத் தெரிகிறது. கனிமொழி அளித்த தகவல்களின் அடிப்படையில், முதல்வர் ஸ்டாலின் உளவுத்துறை மூலம் ராஜீவ் காந்தி குறித்த விரிவான அறிக்கையை கோரியிருந்தார். அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்த தகவல்கள் தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது
போக்குவரத்துத் துறை அமைச்சருடன் நெருக்கம் காட்டி, தமக்குத் தெரிந்தவர்களுக்கு டெண்டர்களைப் பெற்றுத் தந்தது. பதவி உயர்வு மற்றும் சிபாரிசுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள். பெண்கள் தொடர்பான விவகாரங்கள் மற்றும் பிற புகார்கள் ராஜீவ் காந்தி மீது எழுந்துள்ளது.
இந்த அறிக்கையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினிடம் ஆலோசித்த பின்னரே, ராஜீவ் காந்தியின் பதவியைப் பறிக்க தலைமை முடிவெடுத்துள்ளது. ராஜீவ் காந்தி மாற்றப்பட்ட அதே வேகத்தில், அந்த இடத்திற்கு கனிமொழியின் தீவிர ஆதரவாளரான ஜெ. வீரமணி நியமிக்கப்பட்டுள்ளார். இது திமுகவுக்குள் கனிமொழியின் செல்வாக்கு அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.
தென் மாவட்டங்களில் கனிமொழிக்கு இருப்பதாக உணரும் திமுக தலைமை, கனிமொழி பொறுப்பு வகிக்கும் மாவட்டங்களில் அவர் கைகாட்டும் நபர்களுக்கே தேர்தல் வாய்ப்பு வழங்கப்படும் என முதல்வர் உறுதியளித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தற்போது மிக முக்கியமான மாணவரணி செயலாளர் பதவியையும் தனது ஆதரவாளருக்கு அவர் பெற்றுத் தந்திருப்பது கட்சிக்குள் பேசுபொருளாகியுள்ளது. தேர்தல் நேரத்தில் இந்த மாற்றம் பெரிய சர்ச்சையாகக் கூடாது என்பதற்காகவே, ராஜீவ் காந்திக்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் என்ற மாற்றுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

