• vilasalnews@gmail.com

நாம்தமிழர் டூ அதிமுக : இபிஎஸ் முன்னிலையில் இணைந்த பின்னணி என்ன?

  • Share on

தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் கட்சிகளுக்கிடையேயான முக்கியப் பிரமுகர்களின் இடமாற்றம் தற்போதே களைகட்டத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகமாக அறியப்பட்ட காளியம்மாள், இன்று அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்துள்ளார்.


நாம் தமிழர் கட்சியின் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளராக இருந்த காளியம்மாள், தனது ஆவேசமான மற்றும் தெளிவான பேச்சால் மக்கள் மத்தியில் பிரபலமானவர். வட சென்னை தொகுதியில் போட்டியிட்டு 60,000-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று கவனம் ஈர்த்தார். பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டு சுமார் 15,000 வாக்குகளைப் பெற்றார். மயிலாடுதுறை தொகுதியில் களம் கண்டு, 1.20 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைச் சேகரித்து தனது செல்வாக்கை நிரூபித்தார்.


2024 தேர்தலுக்குப் பிறகு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் காளியம்மாளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்ததாகக் கூறப்பட்டது. இதன் விளைவாக, கடந்த பிப்ரவரி 2025-ல் அவர் அக்கட்சியிலிருந்து விலகினார். இடையில் அவர் தவெக அல்லது வேறு கட்சிகளில் இணையக்கூடும் எனப் பல தகவல்கள் உலவினாலும், இன்று அவர் தனது அரசியல் பாதையை அதிமுகவில் உறுதி செய்துள்ளார்.



சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் காளியம்மாள் அக்கட்சியில் இணைந்தார். முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் இதற்கான ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொண்டார். அதிமுகவின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் போன்ற ஒரு முக்கியமான மாநில அளவிலான பொறுப்பு அவருக்கு வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.


வரும் சட்டமன்றத் தேர்தலில், அவருக்குப் பரிச்சயமான மயிலாடுதுறை தொகுதியிலேயே போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படலாம் என அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காளியம்மாளின் வருகை டெல்டா மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியை வலுப்படுத்தும் என அக்கட்சியினர் உற்சாகத்துடன் தெரிவிக்கின்றனர்.

  • Share on

கல்லாப்பெட்டி கூட்டணிதான் முக்கியமா? - தூத்துக்குடி மாணவி கொலை வழக்கில் திமுக அரசை வறுத்தெடுத்த விஜய்!

விஜய் வருகை... பாஜகவின் வியூகம்... எடப்பாடி பழனிசாமியின் அடுத்த மூவ் என்ன?

  • Share on