தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் (தவாக) தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் அறிகுறியைக் காட்டியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், "திமுக கூட்டணியில் நீடிப்பது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கட்சியின் அரசியல் உயர்மட்டக் குழு பரிந்துரை செய்துள்ளது" என்று தெரிவித்தார்.

தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்பது, கொள்கை உடன்பாடு உள்ள பிற கூட்டணிகளுடன் இணைவது, திமுக முன்னிலையில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் மட்டும் கூட்டணியில் தொடர்வது, இது குறித்து இறுதி முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை கட்சியின் நிர்வாகிகள் தனக்கு வழங்கியுள்ளதாகவும், தவாக தொண்டர்களின் உணர்வுகளுக்கும், கட்சியின் வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் அளித்தே இறுதி முடிவு எடுக்கப்படும் என வேல்முருகன் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் இன்று மாலை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், வேல்முருகனின் இந்த மாற்றம் திமுக தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தொகுதிப் பங்கீடு மற்றும் கோரிக்கைகள் தொடர்பான இழுபறியே இந்த அதிருப்திக்குக் காரணம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மேலும், வேல்முருகன் கடந்த முறை திமுகவின் 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிட்டார். ஆனால் இந்த முறை தனது கட்சிக்கு அதிக இடங்கள் வேண்டும் என்றும், தனிச் சின்னத்தில் போட்டியிட விரும்புவதாகவும் கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு திமுக தரப்பில் இன்னும் பச்சைக்கொடி காட்டப்படாததே அவரது அதிருப்திக்குக் காரணம் எனத் தெரிகிறது.

