தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகளை விறுவிறுப்பாக நடத்தி வரும் நிலையில், அதிமுக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்னும் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படாமல் உள்ளது.
கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதால் இந்தத் தாமதம் ஏற்படுகிறதா என்ற கேள்வி எழுந்த நிலையில், குறிப்பாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இக்கூட்டணியில் இணையப்போவதாகத் தகவல்கள் பரவின. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் விஜய் இணையப் பேச்சுவார்த்தை நடப்பதாகவும், அவருக்குத் துணை முதல்வர் பதவி வழங்க பாஜக முன்வந்துள்ளதாகவும் கூறப்பட்டது.
விஜய் ஏற்கனவே தனது மாநாட்டில், கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு அளிக்கப்படும் என அறிவித்திருந்தார். இதனால், அவர் ஒரு வலுவான கூட்டணியை எதிர்பார்ப்பதாகக் கருதப்பட்டது. ஆனால், காங்கிரஸ் கட்சி திமுகவுடனான தனது பிணைப்பை உறுதி செய்ததால், தவெக தனித்துப் போட்டியிடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.
மறுபுறம், கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான சிபிஐ விசாரணை சம்மன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் தனிப்பட்ட நெருக்கடிகளை விஜய் எதிர்கொண்டு வருகிறார். இந்தச் சூழலில்தான், அவர் பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைந்தால் திமுக கூட்டணிக்கு அது பெரும் சவாலாக அமையும் என அரசியல் விமர்சகர்கள் கணித்தனர்.
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம், விஜய் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையப் போகிறாரா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதற்கு எடப்பாடி பழனிசாமி நீங்களாகவே ஒரு கற்பனையான செய்தியைப் பரப்பிவிட்டு, அது குறித்து எங்களிடம் கேள்வி கேட்கிறீர்கள். தவெக-வுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. இல்லாத ஒரு விஷயத்தைப் பற்றி 'நடத்துவீர்களா?' என்று கற்பனையாகக் கேட்கக் கூடாது. அப்படி எதுவும் இல்லை என்பதைத் தெளிவாகக் கூறிவிட்டார். இதன் மூலம், தவெக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்த யூகங்களுக்கு இப்போதைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என இபிஎஸ் சொன்னாரே தவிர, பாஜக தரப்பில் தவெகவிடம் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஏன் ஈடுபட்டு வரக்கூடாது என்ற சந்தேக கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
ஏனென்றால் தமிழகத்தில் என்டிஏ கூட்டணிக்கு அதிமுக தலைமை வகித்தாலும் என்டிஏ கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைப்பதில் பாஜகவே தீவிரம் காட்டியிருக்கிறது. அதன் அடிப்படையிலேயே டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் இணைந்தார். ஆகவே அதேபோலவே என்டிஏ கூட்டணியில் தவெகவை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடலாம் என்று சொல்லப்படுகிறது.
