தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. முதன்முறையாகத் தேர்தலைச் சந்திக்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், ஆட்சியில் பங்கு என்ற வாக்குறுதியுடன் கூட்டணிக்கு அழைப்பு விடுத்த போதிலும், தற்போது வரை தனித்துப் போட்டியிடும் நிலையிலேயே உள்ளது.
வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள் வெற்றி பெற்று, தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்க வேண்டும் என அக்கட்சியின் தொண்டர்கள் மாநிலம் முழுவதும் தீவிரப் பிரச்சாரம் மற்றும் வழிபாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் சிறப்பான வேண்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, 150 பால்குடங்களை ஏந்தி ஊர்வலமாக வந்தனர். கோவிலை வந்தடைந்ததும், அம்மனுக்குப் பால்குட அபிஷேகம் செய்து தவெக தலைவர் விஜய்க்காகச் சிறப்புப் பிரார்த்தனை செய்தனர். அம்மனுக்குச் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது.
ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் விஜய் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தவெகவினரின் இந்த ஆன்மீக முன்னெடுப்பு ஈரோடு பகுதியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
