தமிழக அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து வரும் நிலையில், அதிமுக - பாஜக கூட்டணியில் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இணைந்துள்ளது. இக்கூட்டணியில் அமமுகவுக்கு தேனி மாவட்டத்தின் நட்சத்திர தொகுதியான ஆண்டிபட்டி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிமுகவின் கோட்டையும், மூன்று முதல்வர்களின் வரலாறும் ஆண்டிபட்டி தொகுதி தமிழக அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்படும் இந்தத் தொகுதியில், அக்கட்சியின் மூன்று முன்னாள் முதலமைச்சர்கள் களம் கண்டுள்ளனர்.
எம்.ஜி.ஆர் கடந்த 1984-ம் ஆண்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலும், நேரில் வராமலேயே இத்தொகுதியில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றார். 1989-ல் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி இத்தொகுதியில் போட்டியிட்டார், ஆனால் அப்போது அவர் தோல்வியைத் தழுவினார். 2002 இடைத்தேர்தல் மற்றும் 2006 பொதுத்தேர்தல் என இரண்டு முறை ஜெயலலிதா இத்தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடினார்.
கடந்த காலங்களில் அதிமுகவின் கோட்டையாக இருந்த போதிலும், 2019 இடைத்தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் திமுகவைச் சேர்ந்த மகாராஜன் இங்கு வெற்றி பெற்று தற்போது எம்.எல்.ஏ-வாக உள்ளார். இந்தச் சூழலில், மீண்டும் இத்தொகுதியைத் தன்வசப்படுத்த டிடிவி தினகரன் தீவிரம் காட்டி வருகிறார்.
ஆண்டிபட்டி தொகுதியில் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் முக்குலத்தோர் சமூகத்தினர் 30 சதவீதத்திற்கும் மேல் உள்ளனர். அதே சமூகத்தைச் சேர்ந்த முக்கியத் தலைவர் என்பதால் தினகரனுக்கு இது சாதகமான அம்சமாகக் கருதப்படுகிறது. தேனி மாவட்டத்திற்கு தினகரன் புதியவர் அல்ல. ஏற்கனவே இப்பகுதியை உள்ளடக்கிய பெரியகுளம் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராகப் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு. கூட்டணி இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஆண்டிபட்டியில் தான் போட்டி என கடந்த டிசம்பர் மாதமே அவர் தனது விருப்பத்தை வெளிப்படையாக அறிவித்திருந்தார்.
தங்கள் கட்சியின் உணர்வுப்பூர்வமான தொகுதியான ஆண்டிபட்டியை, கூட்டணி கட்சிக்காக விட்டுக் கொடுத்ததில் அதிமுகவின் ஒரு தரப்பினர் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், தேனி மாவட்டத்தில் நீண்ட காலத் தொடர்பு கொண்டவர் என்பதால், அதிமுகவினரை அரவணைத்துச் சென்று வெற்றியை உறுதி செய்ய முடியும் என அமமுகவினர் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
மொத்தம் 9 தொகுதிகள் அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஆண்டிபட்டி களம் இந்தத் தேர்தலின் மிகவும் உற்றுநோக்கப்படும் தொகுதியாக மாறியுள்ளது.
