• vilasalnews@gmail.com

மார்ச் 12-ல் தவெக தமிழகம் தழுவிய போராட்டம்!

  • Share on

தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகள், தேர்தல் அறிக்கைகள் மற்றும் அனல் பறக்கும் பிரச்சாரங்களால் அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, ஆட்சியைத் தக்கவைக்க திமுகவும், ஆட்சியைப் பிடிக்க அதிமுக மற்றும் பாஜகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இவர்களுடன் நாம் தமிழர் மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் களத்தில் வேகம் காட்டி வருகின்றன.


சமீபகாலமாக தவெக தலைவர் விஜய் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறார். கூட்டணி அமைப்பதில் உள்ள இழுபறி, சொந்த வாழ்க்கை தொடர்பான வதந்திகள் மற்றும் அரசியல் செயல்பாடுகளில் அவர் காட்டும் மெத்தனம் போன்றவை அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளன. மற்ற கட்சித் தலைவர்கள் களத்தில் சுழன்று பணியாற்றும் வேளையில், விஜய் அரிதாகவே மக்களைச் சந்திக்கிறார் என்றும், அவர் பகுதி நேர அரசியலில் ஈடுபடுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.


இந்தச் சூழலில், தமிழக அரசின் செயல்பாடுகளைக் கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்:


விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில், தமிழக அரசு உடனடியாக சாதிவாரி கணக்கெடுப்புக்கான அரசாணையை வெளியிட வேண்டும். தமிழகத்தில் சீர்குலைந்து வரும் சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்தவும், இளைஞர்களைச் சீரழிக்கும் போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கவும் தவறிய அரசைக் கண்டிக்கிறோம்.


அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தவெக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை முடக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளைத் திரும்பப் பெற வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் மார்ச் 12 அன்று காலை 10 மணிக்கு தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என புஸ்ஸி ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.


  • Share on

மகளிர் தினத்தில் நேர்ந்த சோகம்: தமிழக அரசின் பாதுகாப்பை கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சித் தலைவர்!

தினகரன் போட்டியிடும் தொகுதி... அதிமுக கோட்டையில் களம் இறங்க முடிவு!

  • Share on