• vilasalnews@gmail.com

மகளிர் தினத்தில் நேர்ந்த சோகம்: தமிழக அரசின் பாதுகாப்பை கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சித் தலைவர்!

  • Share on

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியில் 7 வயது சிறுமி ஒருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த விவகாரத்தில் கட்டிடத் தொழிலாளி ஒருவரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


குமாரபாளையம் அருகே வசிக்கும் பேக்கரி தொழிலாளி ஒருவரின் 7 வயது மகள், தனது வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென மாயமானார். நீண்ட தேடுதலுக்குப் பிறகு வீடு திரும்பிய அந்தச் சிறுமி, அழுதுகொண்டே வந்துள்ளார். சிறுமியின் உடையில் ரத்தக்கறைகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், அவரை உடனடியாக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.


மருத்துவப் பரிசோதனையில் அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.


அப்பகுதியில் இருந்த சிசிடிவி  காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை அடையாளம் கண்டனர். சின்னப்பநாயக்கன்பாளையம் பகுதியில் பதுங்கியிருந்த அந்த நபரை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். விசாரணையில் அவர் சேலம் அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மணி மணிகண்டன் என்பதும், குமாரபாளையத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.


குற்றவாளி மீது கடத்தல், கொலை மிரட்டல், பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட ஆறு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி அவர் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.


இந்தத் தகவல் காட்டுத்தீயாகப் பரவியதால், ஆத்திரமடைந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் குமாரபாளையம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். குற்றவாளியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும், அவருக்குத் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என முழக்கமிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.


நிலைமை மோசமடைந்ததைத் தொடர்ந்து, மாவட்ட எஸ்.பி. விமலா தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், நீதிமன்றம் மூலம் கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் என உறுதி அளித்த பின்னரே கூட்டம் கலைந்தது.


இந்தச் சம்பவம் குறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் திமுக அரசை கடுமையாகச் சாடியுள்ளார். அவர் தனது பதிவில், உலக மகளிர் தினத்தன்று இத்தகைய அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது வேதனையளிக்கிறது. தமிழகத்தில் சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை யாருக்கும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. நிர்வாகச் சீர்கேட்டால் இத்தகைய குற்றங்கள் பெருகி வருகின்றன. 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என விளம்பரம் செய்யும் அரசு, நிஜத்தில் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு வழங்கத் தவறிவிட்டது, எனத் தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உயர்தர சிகிச்சை அளிக்கவும், குற்றவாளிக்குக் கடும் தண்டனை பெற்றுத் தரவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

  • Share on

தேனியைவிட்டு மதுரையை தேர்வு செய்தது ஏன்? பின்னடைவில் ஓபிஎஸ்!

மார்ச் 12-ல் தவெக தமிழகம் தழுவிய போராட்டம்!

  • Share on