• vilasalnews@gmail.com

தேனியைவிட்டு மதுரையை தேர்வு செய்தது ஏன்? பின்னடைவில் ஓபிஎஸ்!

  • Share on

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த வாரம் சென்னையில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுகவின் தீவிர விசுவாசியாகவும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராகவும் பார்க்கப்பட்ட ஓபிஎஸ், மூன்று முறை தமிழக முதலமைச்சராக பதவி வகித்தவர். இத்தகைய அரசியல் பின்னணி கொண்ட அவர், அதிமுகவின் பரம எதிரியான திமுகவில் இணைந்தது அரசியல் விமர்சகர்கள் மற்றும் தொண்டர்களிடையே பல்வேறு விவாதங்களை உருவாக்கியுள்ளது.



தற்போது திமுகவில் இணைந்துள்ள ஓ.பன்னீர்செல்வம், தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் வரும் மார்ச் 7-ஆம் தேதி மதுரையை அடுத்த திருமங்கலத்தில் பிரம்மாண்டமான இணைப்பு விழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெறவுள்ள இந்த விழாவில், தனது ஆதரவாளர்களை திமுகவில் இணைக்க அவர் திட்டமிட்டுள்ளார். இதற்கான பணிகளில் ஓபிஎஸ் தரப்பு தீவிரமாக ஈடுபட்டு வரும் வேளையில், அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள அவரது ஆதரவாளர்கள் பலரும் மீண்டும் அதிமுகவில் இணைந்து வருகின்றனர்.



குறிப்பாக, தேனி மாவட்டம் கடமலை தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட மண்ணூத்து, சென்றாயபுரம், தேவேந்திரபுரம், கோம்பைத்தொழு, முத்துலாபுரம், வலம்புரி உள்ளிட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்கள், கூட்டாக அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். மதுரையில் இணைப்பு விழா நடைபெற உள்ள சூழலில், ஓபிஎஸ்-ன் கோட்டையாக கருதப்படும் தேனி மாவட்டத்திலேயே அவரது ஆதரவாளர்கள் விலகிச் செல்வது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஓபிஎஸ்-ன் முன்னாள் ஆதரவாளர்கள், நாங்கள் மீண்டும் அதிமுகவுடன் இணைவோம் என்றே காத்திருந்தோம். ஆனால் அவர் திமுகவில் இணைவார் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர், தற்போது திமுகவில் சேர்ந்த பிறகு ஒவ்வொரு அமைச்சரையும் தேடிச் சென்று சந்திப்பது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இது அவரைச் சார்ந்திருக்கும் எங்களையும் மரியாதை குறைவாக நடத்துவது போல் உள்ளது. அதனால்தான் சுயமரியாதையை கருதி மீண்டும் தாய் கழகமான அதிமுகவிலேயே இணைந்து விட்டோம், என்று தெரிவித்தனர்.



மேலும், தனது சொந்த மாவட்டமான தேனியில் இணைப்பு விழாவை நடத்தினால் போதிய கூட்டத்தை கூட்ட முடியாது என்ற அச்சத்திலேயே ஓபிஎஸ் மதுரையை தேர்வு செய்துள்ளதாக அவர்கள் விமர்சிக்கின்றனர். மதுரையில் விழா நடத்தினால் அங்குள்ள அமைச்சர்களான மூர்த்தி, பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மற்றும் கோ.தளபதி ஆகியோர் கூட்டத்தை திரட்டி விடுவார்கள் என்பதால், தனது பலவீனத்தை மறைக்கவே ஓபிஎஸ் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

  • Share on

ராஜ்யசபா சீட் விவகாரத்தில் பிரேமலதா - சுதீஷ் இடையே 'பனிப்போர்'? - பின்னணித் தகவல்கள்!

  • Share on