திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்ட ஒரு ராஜ்யசபா இடத்தைப் பெறுவதில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது சகோதரர் எல்.கே.சுதீஷ் ஆகியோருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பின்னர் சுமுகமாக முடிந்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
திமுக சார்பில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்க உறுதி அளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பிரேமலதா அவர்களே டெல்லிக்குச் சென்று நாடாளுமன்றத்தில் தேமுதிகவின் குரலை ஒலிக்கச் செய்ய வேண்டும் என்று கட்சியின் மூத்த நிர்வாகிகள் சிலர் அவரிடம் வலியுறுத்தியுள்ளனர். பெண் எம்பிக்களின் பங்களிப்பு தேசிய அளவில் கவனிக்கப்படும், எனவே நீங்கள் டெல்லி அரசியலில் தடம் பதிக்க வேண்டும்; சுதீஷ் அவர்களை வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வைக்கலாம் என்பதே அவர்களின் வாதமாக இருந்துள்ளது. நிர்வாகிகளின் இந்த லாஜிக்கான ஆலோசனையை ஏற்ற பிரேமலதாவுக்கும், நாடாளுமன்றம் செல்லும் ஆர்வம் உருவானதாகத் தெரிகிறது.
இது தொடர்பாகத் தனது சகோதரர் எல்.கே.சுதீஷிடம் பிரேமலதா ஆலோசித்தபோது, அங்கு நிலைமை விபரீதமானதாகக் கூறப்படுகிறது. நீண்டகாலமாக டெல்லி அரசியல் உனக்கானது என்று தன்னிடம் கூறிவிட்டு, இப்போது திடீரென முடிவை மாற்றுவது குறித்து சுதீஷ் மிகுந்த வருத்தமும், கோபமும் அடைந்ததாகத் தெரிகிறது.
கட்சிக்காக இத்தனை ஆண்டுகள் உழைத்திருக்கிறேன். இந்த சீட் எனக்காகத்தான் வாங்கப்பட்டது என்று சொல்லிவிட்டு, இப்போது நீங்கள் போட்டியிடுவதை என்னால் ஏற்க முடியாது. ஒருவேளை எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டால் கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலகவும் தயார் என்று அவர் உணர்ச்சிவசப்பட்டுப் பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரேமலதாவின் மகன்களும் இந்த விவகாரத்தில் சில கருத்துகளை முன்வைத்த நிலையில், வீட்டில் பெரும் விவாதமே நடந்துள்ளது. தம்பியின் பிடிவாதமான பேச்சால் பிரேமலதா மனவருத்தம் அடைந்தாலும், கட்சியின் நலன் மற்றும் குடும்ப ஒற்றுமையைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே திட்டமிட்டபடி சுதீஷுக்கே அந்த வாய்ப்பை வழங்க அவர் சம்மதித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, எல்.கே.சுதீஷ் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். தேமுதிகவுக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத நிலையில், திமுகவின் 10 எம்.எல்.ஏ-க்கள் அவரை முன்மொழிந்தனர். இதன் மூலம் தேமுதிக முதல்முறையாக நாடாளுமன்றத்திற்குள் நுழைய உள்ளது. ஆரம்பத்தில் மனக்கசப்புகள் இருந்தாலும், தம்பியின் அரசியல் எதிர்காலத்திற்காக அந்த வருத்தங்களை மறைத்துக்கொண்டு, வேட்புமனு தாக்கலின் போது பிரேமலதா உடன் சென்றது குறிப்பிடத்தக்கது.



