சேலத்தில் நடைபெற்ற அதிமுக ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் நடிகை விந்தியா, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திமுக அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
அதிமுகவில் இருந்துகொண்டு அனைத்து சலுகைகளையும் அனுபவித்த ஓ.பன்னீர்செல்வம், தற்போது திமுக தலைவர்களைப் புகழ்ந்து பாடுவதாக விந்தியா சாடினார். அதிமுகவின் தயவால் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துவிட்டு, இப்போது ஜெயலலிதாவின் புகைப்படத்தை காரில் இருந்தும், இரட்டை இலை சின்னத்தை வீட்டின் கேட்டிலிருந்தும் அகற்றிவிட்டார் ஓபிஎஸ்.
திமுக தலைவர்களை 'தளபதி', 'குட்டி தளபதி' என வரிசையாகப் புகழ்ந்து தள்ளும் இவருக்கு, தற்போது இருக்கும் வீடு மற்றும் கார் போன்ற வசதிகள் எங்கிருந்து வந்தது என்பதை மக்கள் யோசிக்க வேண்டும். ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் போன்றவர்கள் திமுகவின் கைக்கூலிகளாகச் செயல்படுவது இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது என்று அவர் குறிப்பிட்டார்.
கட்சியைத் துரோகிகளிடமிருந்து மீட்டவர் எடப்பாடி பழனிசாமி என்று புகழ்ந்த விந்தியா, துரோகிகள் திமுகவுடன் கைகோர்த்து அதிமுக அலுவலகத்தையே சேதப்படுத்தியபோது, எடப்பாடியார் துணிச்சலுடன் நின்று கட்சியைக் காப்பாற்றினார். துரோகிகளை அடையாளம் கண்டு அவர்களைக் களை எடுத்தது சரியான முடிவு என்றார்.
தமிழகத்தில் ஊழல் மலிந்துவிட்டதாகவும், பெண்களின் முன்னேற்றம் என்பது வெறும் விளம்பரமாக மட்டுமே இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் திமுக வாசலில் இரண்டு சீட்டுகளுக்காகக் காத்துக் கிடப்பதாக எள்ளி நகையாடினார்.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிற்கு என்று தனிப்பட்ட கொள்கை எதுவும் கிடையாது என்றும், தேர்தல் நேரத்தில் பேரம் பேசுவதே அவரது வாடிக்கை என்றும் விமர்சித்தார். அண்ணியாருக்கு ஓட்டு, மச்சானுக்கு சீட்டு என்பதே அவர்களின் நிலைப்பாடு எனத் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டதை நினைவுகூர்ந்த அவர், வரும் தேர்தலில் மக்கள் அதிமுகவிற்கு வாக்களிப்பதன் மூலம் திமுகவிற்குத் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று தனது உரையில் உறுதிபடத் தெரிவித்தார்.



