• vilasalnews@gmail.com

நாடாளுமன்றத்தில் முதன்முறையாக தேமுதிக... முரசு முழங்குமா? முடங்குமா?

  • Share on

கேப்டன் விஜயகாந்தால் 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தேமுதிக, இரண்டு தசாப்தங்களைக் கடந்த நிலையில் ஒரு மிகப்பெரிய அரசியல் மைல்கல்லை எட்டவுள்ளது. அக்கட்சி தொடங்கப்பட்டு 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள சூழலில், முதல்முறையாக தேமுதிகவைச் சேர்ந்த ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்திலேயே, அதாவது 2011-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்த் அமர்ந்து சாதனை படைத்தார். இருப்பினும், டெல்லி நாடாளுமன்ற அதிகார மையத்தில் ஒரு இடத்தைப் பிடிப்பது அக்கட்சிக்கு நீண்டகாலப் போராட்டமாகவே இருந்து வந்தது. 2013-ல் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலின்போது, அக்கட்சியின் பொருளாளர்  இளங்கோவன் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். ஆனால், உட்கட்சிப் பூசல்களாலும், எம்.எல்.ஏ-க்களின் கட்சித் தாவலாலும் அந்த வாய்ப்பு நழுவிப் போனது.


கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட விஜய பிரபாகரன், மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்டார். முன்னதாக அதிமுக கூட்டணியில் இருந்தபோது மாநிலங்களவை சீட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பில் 2026-ல் சீட் தருவதாகக் கூறியது தேமுதிகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்தச் சூழலில் தான், திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கு தற்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவி உறுதியாகியுள்ளது.


திமுக - தேமுதிக இடையே இதற்கான அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், தேமுதிக சார்பில் போட்டியிடப் போகும் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தேமுதிகவின் பொருளாளரும், அக்கட்சியின் முக்கிய முகமுமான சுதீஷ் மாநிலங்களவைக்குச் செல்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், விஜயகாந்தின் நீண்டகாலக் கனவான தேமுதிகவின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிப்பது விரைவில் நனவாகப் போகிறது.


  • Share on

திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு: செல்வப்பெருந்தகை சொன்ன முக்கிய தகவல்!

திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு நிறைவு; அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிப்பது ஏன்?

  • Share on