தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது வரை திமுக தலைமையிலான மெகா கூட்டணியில் மொத்தம் 21 கட்சிகள் இடம்பிடித்துள்ளன. இதில் முதற்கட்டமாக இரண்டு கட்சிகளுடன் அதிகாரப்பூர்வமாக தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
பிப்ரவரி 22-ம் தேதி முதல் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் ஆலோசனைகளைத் தொடங்கி நடத்தி வருகிறது. இதுவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நிறைவுற்று, தலா 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்: 2 இடங்கள் (ஏணி சின்னம்)
மனிதநேய மக்கள் கட்சி: 2 இடங்கள் (உதயசூரியன் சின்னம்)
மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 229 தொகுதிகளுக்கு இன்னும் 19 கட்சிகளுடன் உடன்பாடு எட்டப்பட வேண்டியுள்ளது. திமுக இம்முறை குறைந்தபட்சம் 170 இடங்களில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதால், மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கான இடங்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் (சிபிஐ, சிபிஎம்), விசிக போன்ற பழைய கூட்டணிக் கட்சிகளுடன் முதற்கட்டப் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. மேலும், இம்முறை தேமுதிக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட பல கட்சிகள் கூட்டணியில் இணைந்திருப்பதால் தொகுதிப் பங்கீடு சவாலானதாக மாறியுள்ளது.
திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயகக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை, திராவிட வெற்றிக் கழகம் மற்றும் புதிய திராவிட கழகம் உள்ளிட்ட கட்சிகள் தற்போது வரை திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் அடுத்த சில நாட்களில் கூட்டணியில் உள்ள மற்ற முக்கிய கட்சிகளுக்கான தொகுதி அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



