திண்டுக்கல்லில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் 20-க்கும் மேற்பட்டோர், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
இந்த நிகழ்விற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திண்டுக்கல் சீனிவாசன்:-
ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் குறித்துக் காரசாரமான கருத்துக்களை முன்வைத்தார்.
ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவைச் சிதைத்து, திமுகவின் பக்கம் கொண்டு செல்லும் நோக்கத்திலேயே செயல்பட்டு வந்ததாகச் சீனிவாசன் குற்றம் சாட்டினார். வார்டு கவுன்சிலராக இருந்து சேர்மன் ஆன ஓபிஎஸ்-ஸை, டிடிவி தினகரன் தான் ஜெயலலிதாவிடம் அறிமுகப்படுத்தினார். அதன் விளைவாகவே அவர் மூன்று முறை முதலமைச்சர் பதவியை அலங்கரித்தார்.
எம்ஜிஆர் எதற்காக திமுகவை 'தீய சக்தி' என்று கூறி அதிமுகவைத் தொடங்கினாரோ, அதே வார்த்தையை ஓபிஎஸ் பலமுறை பயன்படுத்தியுள்ளார். ஆனால், இப்போது நான் எப்போது அப்படிச் சொன்னேன்? என அவர் கேட்பது வேடிக்கையாக உள்ளது.
கட்சியைப் பிளவுபடுத்தும் நோக்கம் அம்பலமானதால்தான் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது வேறு வழியின்றி திமுகவுடன் அவர் கைகோர்த்துள்ளார். டெல்லி உத்தரவுக்காகக் காத்திருந்ததாகக் கூறப்படுவதெல்லாம் வெறும் ஏமாற்று வேலை.
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் கருத்துக்கள் மற்றும் தேர்தல் எதிர்பார்ப்புகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார். அதிமுக - பாஜக கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி தான் தலைமை என்பது ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதில் எந்தக் குழப்பமும் இல்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணி 210-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெறும்.
கட்சியில் இருந்த துரோகிகள் அனைவரும் விலகிவிட்டதால், அதிமுக தற்போது 'தெளிந்த நீரோடை' போலப் பலமாக உள்ளது. அதிமுக அறிவித்துள்ள திட்டங்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு மக்களிடையே பெரும் வரவேற்பு உள்ளது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, வரும் தேர்தலில் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராவார் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.



