தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின் அவருக்குப் பூங்கொத்து கொடுத்து முறைப்படி வரவேற்றார்.
ஓ. பன்னீர்செல்வத்துடன் அவரது மகனும் முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத், உசிலம்பட்டி தொகுதி எம்.எல்.ஏ. ஐயப்பன் ஆகியோரும் திமுகவில் இணைந்தனர். இந்த நிகழ்வின் போது தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
கட்சியில் இணைந்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்ததாவது:
பேரறிஞர் அண்ணா தொடங்கிய தாய்க்கழகமான திமுகவில் இணைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். அண்ணா மற்றும் கலைஞரின் வழியில் ஸ்டாலின் கட்சியைச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் ஏழை எளிய மக்கள் மற்றும் பெண்கள் பெரும் பலன் பெற்றுள்ளனர். முதல்வரின் மக்கள் நலத்திட்டங்கள் கடைக்கோடி மனிதனையும் சென்றடைந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் சர்வாதிகாரப் போக்காலும், ஆணவத்தாலும் அதிமுக அழிவுப்பாதையை நோக்கிச் செல்கிறது. தென்மாவட்டத் தலைவர்களை வளரவிடாமல் தடுக்கும் நோக்கில் அவர் செயல்படுகிறார். இனி அதிமுகவிற்கு எதிர்காலமே இல்லை. வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வாய்ப்பளித்தால் மீண்டும் போட்டியிடுவேன். திமுக மீண்டும் அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்பதில் ஐயமில்லை.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட ஒற்றைத் தலைமைப் போரில், ஓபிஎஸ் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பல்வேறு சவால்களைச் சந்தித்தார். கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட அவர், அதிமுகவில் மீண்டும் இணைய எடுத்த முயற்சிகள் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதத்தால் தோல்வியடைந்தன.
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், கடந்த வாரம் தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்த ஓபிஎஸ், தற்போது அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்துள்ளார். திமுகவில் இணைந்துள்ள ஓ. பன்னீர்செல்வத்திற்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. மேலும், வரும் தேர்தலில் அவருக்கு மீண்டும் போடிநாயக்கனூர் தொகுதியும், அவருடன் வந்த ஆதரவாளர்களுக்கு உரிய இடங்களும் ஒதுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



