தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மை பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் பேசும் போது:
விஜய் சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே, மக்கள் சேவைக்காக அந்தப் புகழைத் துறந்து அரசியலுக்கு வந்திருப்பதாக புஸ்ஸி ஆனந்த் குறிப்பிட்டார். தலைவர் விஜய் ஒரு அக்ரிமெண்ட்டில் கையெழுத்து போட்டால் போதும், அடுத்த ஒரு மணி நேரத்தில் அந்தப் படத்தின் உரிமையை வாங்க விநியோகஸ்தர்கள் போட்டி போடுவார்கள். தோல்வி அடைந்து அல்லது ஓய்வு பெற்று அவர் அரசியலுக்கு வரவில்லை. அத்தகைய உச்சத்தை உதறிவிட்டு மக்களுக்காக வந்தவர் அவர்.
கடலூர் மாவட்டம் விஜய்க்கு மிகவும் பிடித்தமான ஒன்று எனத் தெரிவித்த அவர், தானே புயல் மற்றும் சுனாமி போன்ற இயற்கை பேரிடர் காலங்களில் விஜய் செய்த உதவிகளை நினைவுகூர்ந்தார். கடந்த 32 ஆண்டுகளாக மக்கள் சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தற்போதைய திமுக அரசை 'கையாளாகாத அரசு' என விமர்சித்த புஸ்ஸி ஆனந்த், மக்கள் வரிப்பணத்தில் செய்யும் பணிகளைக் கூட முறையாகச் செய்யவில்லை எனக் குற்றம் சாட்டினார். மேலும், நான் ஊழல் செய்ய மாட்டேன், என்னுடன் இருப்பவர்களையும் செய்ய விடமாட்டேன் என்று தைரியமாகச் சொன்ன ஒரே தலைவர் விஜய் தான் எனப் பெருமிதம் கொண்டார்.
கடலூர் மாவட்டத்தின் 9 சட்டமன்றத் தொகுதிகளும் தவெக-வின் கோட்டையாக மாறும். விஜய் தமிழகத்தின் முதலமைச்சராவது உறுதி. தொண்டர்கள் அனைவரும் 'விசில்' சின்னத்தை வீடு வீடாகக் கொண்டு சேர்க்க வேண்டும். பெண்களுக்குப் பாதுகாப்பான ஆட்சியை தவெக வழங்கும்.
தமிழகத்தில் ஒரே தளபதி அது விஜய் மட்டும்தான் என முழங்கிய அவர், தொண்டர்கள் வரும் சட்டமன்றத் தேர்தலில் கடுமையாக உழைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.



