அண்ணா அறிவாலயத்தில் கடந்த வியாழக்கிழமை தமிழக முதல்வர் ஸ்டாலினை, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் பொருளாளர் எல்.கே. சுதீஷ் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி. ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பின் மூலம், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக - தேமுதிக கூட்டணி அதிகாரப்பூர்வமாக உறுதியானது.
தற்போதைய தகவல்களின்படி, தேமுதிகவிற்கு 7 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா இடமும் ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தேமுதிக தரப்பில் தங்களுக்கு செல்வாக்குள்ள 20 தொகுதிகள் அடங்கிய பட்டியலை திமுகவிடம் வழங்கியுள்ளது.
விருகம்பாக்கம், பல்லாவரம், கும்மிடிப்பூண்டி,விழுப்புரம், விக்கிரவாண்டி, ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம், கடலூர், நெய்வேலி, கே.வி.குப்பம்,சேலம் தெற்கு, சிங்காநல்லூர், கோவை வடக்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், சாத்தூர், விருதுநகர், சிவகாசி போன்றவைகள் ஆகும்.
இதில், பிரேமலதா விஜயகாந்த் கேப்டன் விஜயகாந்த் வெற்றி பெற்ற விருத்தாசலம் அல்லது ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட முதலில் ஆர்வம் காட்டியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், திமுக தலைமை அவருக்கு ஒரு புதிய ஆலோசனையை வழங்கியுள்ளது.
சென்னையில் உள்ள விருகம்பாக்கம் தொகுதியில் பிரேமலதா போட்டியிட வேண்டும் என திமுக விரும்புவதாகத் தகவல். அதிமுக - பாஜக கூட்டணியில் விருகம்பாக்கத்தில் தமிழிசை சவுந்தரராஜன் களம் இறங்க வாய்ப்புள்ளதால், அவரை எதிர்க்க பிரேமலதாவே சரியான வேட்பாளர் என திமுக கருதுகிறது. சென்னையில் போட்டியிடுவது, பிரேமலதா தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மற்ற வேட்பாளர்களுக்காகப் பிரச்சாரம் செய்ய வசதியாக இருக்கும் என்றும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் பட்சத்திலே, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து ஒரு யூகத்திற்கு வர முடியும் என்று சொல்லப்படுகிறது.



