தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. இந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி, சுமார் 70 தொகுதிகளை இலக்காகக் கொண்டு தனது களப்பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்ற தொகுதிகளில் பாஜக அதிக கவனம் செலுத்தி வருகிறது. அந்தப் பட்டியலில் தென்காசி சட்டமன்றத் தொகுதியும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட ஜான் பாண்டியன், தென்காசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மட்டும் 40,000-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இந்தத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். இது, அத்தொகுதியை எப்படியும் தங்களது வசம் கொண்டுவர வேண்டும் என்ற பாஜகவின் உறுதியைக் காட்டுகிறது.
தற்போது தனது சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ள நடிகர் சரத்குமார், இந்தத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. 2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட சரத்குமார், சுமார் 22,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தென்காசி எம்.எல்.ஏ-வாகப் பணியாற்றியவர்.
தென்காசியில் கணிசமாக உள்ள நாடார் சமுதாய வாக்குகள் சரத்குமாருக்குப் பலமாக அமையும் எனக் கருதப்படுகிறது. ஒரு நடிகராகவும், முன்னாள் எம்.எல்.ஏ-வாகவும் அத்தொகுதி மக்களிடையே அவர் நன்கு அறிமுகமானவர். இருப்பினும், சரத்குமார் சமீபத்திய பேட்டிகளில், தான் தேர்தலில் நிற்பதை விடத் தனது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு வாங்கித் தருவதே தனது விருப்பம் என்று தெரிவித்துள்ளார். மேலும், அவரும் ராதிகாவும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் சில இடங்களில் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அரசியல் சூழலுக்கு ஏற்ப இந்த முடிவில் மாற்றங்கள் வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மறுபுறம், அதிமுக இந்தத் தொகுதியை பாஜகவுக்கு விட்டுக் கொடுக்குமா என்பது கேள்விக்குறியே. கடந்த தேர்தல்களில் அதிமுகவின் செல்வமோகன் தாஸ் பாண்டியன் மற்றும் காங்கிரஸின் பழனி நாடார் இடையே கடும் போட்டி நிலவியது. வெறும் 400 வாக்குகளுக்கும் குறைவான வித்தியாசத்திலேயே வெற்றி-தோல்விகள் தீர்மானிக்கப்பட்டுள்ளன. எனவே, அதிமுக இம்முறை நேரடியாகக் களமிறங்கி வெற்றி பெறத் துடிக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தென்காசி தொகுயில் யார் வேட்பாளர் என்பதை தேர்தல் காலம் வரை பொறுத்திருந்து பார்ப்போம்



