திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், அரசியல் களம் மற்றும் தேர்தல் கூட்டணி குறித்துப் பல்வேறு சுவாரசியமான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
திமுக அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டை கடுமையாகச் சாடிய அவர், வெங்காயத்தை உரித்தால் உள்ளே எப்படி ஒன்றும் இருக்காதோ, அதுபோலத்தான் இந்த பட்ஜெட்டும் இருக்கிறது என்றார். மேலும், தமிழகத்தில் உயர்ந்துள்ள மின்சாரக் கட்டணம் மற்றும் விலைவாசி உயர்வால் மக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும், 'எடப்பாடி வெல்லட்டும், தமிழகம் முன்னேறட்டும்' என்ற முழக்கத்துடன் தேர்தலைச் சந்திக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மார்ச் 1-ம் தேதி பிரதமர் மோடி மதுரைக்கு வருகை தர உள்ளார். தேர்தல் பிரச்சார மேடையில் பிரதமருடன் யார் யார் இருப்பார்கள் என்பது அப்போதுதான் தெரியும். நிச்சயம் அரசியலில் அதிசயங்கள் நடக்கும் என்று சூசகமாகக் குறிப்பிட்டார்.
விஜய் என்ன மனநிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லை. அமெரிக்க பாணியில் மக்களைச் சந்திக்காமல் தொலைக்காட்சியில் மட்டும் பிரச்சாரம் செய்யத் திட்டமிடுகிறாரா எனத் தெரியவில்லை. தேர்தலுக்குப் பிறகுதான் அவரது பலம் என்னவென்று புரியும். வைகோ ஒரு அப்பிராணி, வயதானவர் என்பதால் அவரைப் பற்றி விமர்சிக்க விரும்பவில்லை.
தேமுதிக திமுகவுடன் இணைந்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், நாங்கள் யாரிடமும் பேசவில்லை, எங்கு வேண்டுமானாலும் போவோம் என்று அவர்களே சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள். இதனால் அதிமுகவுக்குப் பின்னடைவு ஏதுமில்லை என்று விளக்கமளித்தார்.



