தமிழக அரசியலில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று திடீரென தமிழக முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டு வரும் ஓ. பன்னீர்செல்வம், தனது மகன் ரவீந்திரநாத்துடன் இன்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தார். அப்போது முதல்வருக்குப் பழக்கூடை வழங்கிய ஓ.பி.எஸ், அவருடன் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்பின் போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும் உடனிருந்தார்.
2024 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் ராமநாதபுரத்தில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த நிலையில், தற்போது அக்கூட்டணியில் இருந்து அவர் வெளியேறியுள்ளார். மீண்டும் அதிமுகவில் இணைய ஓ.பி.எஸ் விருப்பம் தெரிவித்தாலும், எடப்பாடி பழனிசாமி தரப்பு அதனைத் திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் போன்ற முக்கிய நிர்வாகிகள் திமுகவில் இணைந்துவிட்டனர். பண்ருட்டி ராமச்சந்திரன் 'எம்ஜிஆர் அதிமுக' என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளது ஓ.பி.எஸ்-க்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
பாஜக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு பக்கமும் கதவுகள் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஓ.பி.எஸ் திமுக கூட்டணியை நோக்கி நகர்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒருவேளை திமுக கூட்டணியில் இணைந்தால், அவர் தனது பெயரிலான அமைப்பில் சுயேச்சைச் சின்னத்தில் போட்டியிடுவாரா அல்லது திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே களம் காண்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மரியாதை நிமித்தமான சந்திப்பா? ஏற்கனவே உடல்நலம் குறித்து விசாரிக்க முதல்வரைச் சந்தித்தபோது, அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, எதிரியும் இல்லை; எதுவும் நடக்கலாம் என ஓ.பி.எஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சந்திப்பு குறித்து திமுக அல்லது ஓ.பி.எஸ் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ கூட்டணி அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்றாலும், தேர்தல் நெருங்கும் வேளையில் இந்த நகர்வு தமிழக அரசியலில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.



