தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த தேமுதிகவின் கூட்டணி விவகாரத்திற்கு நேற்று நள்ளிரவில் ஒரு முடிவு எட்டப்பட்டது. அதிமுக அல்லது பாஜகவுடன் தேமுதிக செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் ஸ்டாலினின் சாதுர்யமான நகர்வால் தேமுதிக அதிகாரப்பூர்வமாக திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.
ஆட்சியில் பங்கு, அதிக தொகுதிகள் என நிபந்தனை விதித்து வந்த காங்கிரசுக்கு, உங்களுக்கு மாற்றாக தேமுதிக இருக்கிறது என்ற நேரடிச் செய்தியை ஸ்டாலின் சொல்லாமல் சொல்லியுள்ளார். அடுத்த மாதம் நடைபெற உள்ள 6 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தலில், தேமுதிகவுக்கு ஒரு இடத்தை ஒதுக்குவதாக திமுக தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் வேணுகோபால் டெல்லியில் இருந்து சென்னை வந்தபோது, அவரைச் சந்திக்க முதல்வர் ஸ்டாலின் மறுத்துவிட்டதாகக் கூறப்படும் 'கோல்ட் ஷோல்டர்'அணுகுமுறை காங்கிரஸை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதன் எதிரொலியாகவே, நேற்று வரை திமுகவுக்கு எதிராக உரிமைக் குரல் எழுப்பி வந்த விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர், திடீரென ஸ்டாலினைப் புகழ்ந்து தள்ளியுள்ளார். ஸ்டாலினே எங்கள் தலைவர் என்ற ரீதியில் அவர் பேசியுள்ளது, திமுகவின் பிடி இறுகியதையே காட்டுகிறது.
வரும் பிப்ரவரி 22 அன்று திமுக கூட்டணி கட்சிகளுடனான முறையான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் தொடங்குகின்றன. தேமுதிகவின் வருகையால் தங்களின் முக்கியத்துவம் குறையும் என்பதை உணர்ந்துள்ள காங்கிரஸ், தற்போது தனது பிடிவாதத்தைக் குறைத்துக்கொண்டு ஒரு 'ஜூனியர் பார்ட்னராக' தொடர இசைந்துள்ளதாகத் தெரிகிறது. மொத்தத்தில், 2026 தேர்தல் களத்தில் தனது ஆதிக்கத்தை மிகத் தெளிவாக நிலைநாட்டியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.



