தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், அரசியல் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் திமுக - தேமுதிக கூட்டணி உறுதியாகியுள்ளது. கட்சி ஆரம்பிக்கப்பட்ட கடந்த 20 ஆண்டுகளில், திமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைப்பது இதுவே முதல்முறை என்பதால், இது ஒரு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகியோருக்கு இடையே நடைபெற்ற சந்திப்பில் இக்கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்தச் சந்திப்பின் போது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் இரு தரப்பு முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர். கேப்டன் விஜயகாந்த் உயிருடன் இருந்தபோதே திமுகவுடன் கூட்டணி அமைந்திருக்க வேண்டும் எனத் தொண்டர்கள் விரும்பினர் என்று சந்திப்பிற்குப் பின் பிரேமலதா விஜயகாந்த் உணர்ச்சிப்பூர்வமாகத் தெரிவித்தார்.
தேமுதிக இதுவரை அதிமுக அல்லது பாஜக கூட்டணியையே பெரும்பாலும் தேர்ந்தெடுத்து வந்தது. சமீபத்திய மக்களவைத் தேர்தலில் கூட அதிமுகவுடன் கைகோர்த்தது. ஓரிரு தினங்களுக்கு முன்பு கூட கோவையில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் அதிமுக மற்றும் பாஜக முக்கியத் தலைவர்களுடன் பிரேமலதா விஜயகாந்த் நெருக்கம் காட்டியதால், தேமுதிக மீண்டும் பழைய கூட்டணிக்கே செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. அரசியல் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் திமுக - தேமுதிக கூட்டணி அமைந்துள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டமன்றத்தில் தேமுதிகவுக்கு பிரதிநிதித்துவம் இல்லாத நிலை நீடிக்கிறது. குறைந்தது 3 முதல் 5 தொகுதிகளிலாவது வெற்றி பெற்று, மீண்டும் சட்டமன்றத்திற்குள் நுழைய வேண்டும் என்பதே கட்சியின் பிரதான இலக்கு. திமுக கூட்டணியில் இணைவதன் மூலம் ஒரு ராஜ்யசபா (MP) இடத்தைப் பெற்று, முதன்முறையாக டெல்லி நாடாளுமன்றத்திற்குத் தன் பிரதிநிதியை அனுப்ப தேமுதிக திட்டமிட்டுள்ளது.
தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த இரு கட்சிகளும் இணைந்து விரைவில் ஒரு குழுவை அமைக்கவுள்ளன. திமுக கூட்டணியில் ஏற்கனவே மதிமுக, விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ள நிலையில், தேமுதிகவின் வருகை அக்கூட்டணிக்குக் கூடுதல் பலத்தை அளிக்குமா அல்லது தொகுதிப் பங்கீட்டில் சிக்கலை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
2011 தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்ற தேமுதிக, தற்போது 15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு பெரிய திராவிடக் கட்சியுடன் இணைந்து சட்டமன்ற தேர்தலை சந்தித்து தன் அரசியல் வாழ்வாதாரத்தைத் தக்கவைக்கப் போராடுகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் .



