தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக தனது தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, நாளை திமுக மாவட்டச் செயலாளர்களின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
நாளை மாலை 6.30 மணிக்கு தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக இந்த கூட்டம் நடைபெற உள்ளது.
மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பார்வையாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களாகத் தேர்வு செய்யப்பட்ட மகளிர் அணியினர். இந்தக் கூட்டத்தின் மிக முக்கிய நோக்கமாக 'வெல்லும் தமிழ் பெண்கள்' என்ற பெயரிலான வீடு வீடாகச் செல்லும் பரப்புரைத் திட்டம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
இத்திட்டத்திற்கான தொகுதி வாரியான பயிற்சி முகாம்கள் நாளை தொடங்கி பிப்ரவரி 22 வரை நடைபெற உள்ளன. வரும் பிப்ரவரி 23-ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் திமுக மகளிர் அணியினர் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்திக்க உள்ளனர். திராவிட மாடல் அரசின் சாதனைகளை மக்களிடம் நேரடியாகக் கொண்டு சேர்ப்பதே இந்தப் பிரசாரத்தின் பிரதான நோக்கமாகும்.
தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவும் சூழலில், கட்சி நிர்வாகிகளை ஒருங்கிணைக்கவும், தேர்தல் களப்பணிகளை முறைப்படுத்தவும் இக்கூட்டத்தை பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தேர்தல் வியூகங்களை வகுப்பதிலும், வாக்குச்சாவடி முகவர்களைத் தயார் செய்வதிலும் இந்தக் கூட்டம் மிக முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.



