2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. பல்வேறு அரசியல் நகர்வுகளுக்கு மத்தியில், பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம், ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்துள்ளது. இது தமிழக அரசியலில் ஒரு மிக முக்கியமான திருப்பமாகக் கருதப்படுகிறது.
வரவிருக்கும் தேர்தலில் திமுக-காங்கிரஸ் ஒரு அணியாகவும், அதிமுக-பாஜக மற்றொரு அணியாகவும் களம் காணும் நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்தனியாக மோதவுள்ளன. குறிப்பாக, விஜய்யின் அரசியல் வருகை யாருடைய வாக்கு வங்கியைப் பாதிக்கும் என்ற அச்சம் பிரதான கட்சிகளிடையே உள்ளது. 2006 தேர்தலைப் போல வாக்குகள் சிதறிவிடக் கூடாது என்பதில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே மிகக் கவனமாகச் செயல்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாகவே, வலுவான கூட்டணிகளை அமைப்பதில் இரு கட்சிகளும் தீவிரம் காட்டின. நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, யாரும் எதிர்பார்க்காத வகையில் தேமுதிக, திமுகவுடன் கரம் கோர்த்துள்ளது.தேமுதிக தரப்பிலிருந்து ஒரு ராஜ்யசபா சீட் மற்றும் கணிசமான தொகுதிகள் கோரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடக்கத்தில் அதிமுக மற்றும் திமுக என இரு தரப்புடனும் பேச்சுவார்த்தை நடந்தாலும், தேமுதிக இதுவரை திமுகவுடன் ஒருமுறை கூட கூட்டணி அமைத்தது இல்லை என்பதால், அவர்கள் அதிமுக பக்கமே செல்வார்கள் என அரசியல் நோக்கர்கள் கணித்திருந்தனர்.
ஆனால், அனைத்து கணிப்புகளையும் பொய்யாக்கும் வகையில் திமுகவுடன் கூட்டணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. தற்போதைய தகவல்படி, தேமுதிகவிற்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்படலாம் என்றும், ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தேமுதிகவின் இந்த முடிவை அதிமுக மற்றும் பாஜக அதிர்ச்சியுடன் பார்க்கின்றன. இது குறித்து தமிழக பாஜக தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தியான திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் கேப்டன் விஜயகாந்த். திமுக அவருக்குக் கொடுமைகளையும், அவமானங்களையும் மட்டுமே வழங்கியது. அத்தகைய மக்கள் விரோத திமுகவுடன் இன்று தேமுதிக இணைந்திருப்பதை கேப்டனின் ஆன்மா ஒருபோதும் மன்னிக்காது எனச் சாடியுள்ளது.



