தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெற்ற திமுக இளைஞரணி நிர்வாகிகள் மாநாட்டில் உரையாற்றிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மத்திய பாஜக அரசையும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
திமுக இளைஞரணியின் கட்டமைப்பு குறித்துப் பேசிய அவர், இன்று 5 லட்சம் நிர்வாகிகள் மற்றும் 50 லட்சம் உறுப்பினர்களுடன் இந்தியாவிலேயே அசைக்க முடியாத அரசியல் சக்தியாக திமுக இளைஞரணி உருவெடுத்துள்ளது. மற்ற கட்சிகள் பூத் கமிட்டி அமைக்க ஆள் இல்லாமல் திண்டாடும் நிலையில், திமுகவின் பலம் உலகிற்கே தெரியும், என்றார்.
தமிழகத்தில் மீண்டும் அமையப்போவது 'திமுக 2.0' அரசு தான் என்பதை உறுதிபடத் தெரிவித்த அவர், அடுத்த முறை திமுக ஆட்சிக்கு வரும்போது, மகளிருக்கான உரிமைத்தொகை 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பைக் கேட்டு சங்கி கூட்டமும், அடிமை கூட்டமும் கலக்கத்தில் உள்ளனர், எனக் குறிப்பிட்டார்.
அமித்ஷாவின் அரசியல் பருப்பு வட மாநிலங்களில் வேகலாம், ஆனால் தமிழ் மண்ணில் ஒருபோதும் வேகாது.தேர்தல் நேரத்தில் மோடியும் அமித்ஷாவும் அடிக்கடி தமிழகத்திற்கு வருவார்கள், ஆனால் தமிழகத்திற்குச் சேர வேண்டிய நிதி மட்டும் வராது. பாஜகவின் 'டபுள் இன்ஜின்' என்பது உண்மையில் பஞ்சரான டயர்களும், வேலை செய்யாத டப்பா இன்ஜினும்தான்.
2026 சட்டமன்றத் தேர்தலை ஒரு சாதாரணத் தேர்தலாகப் பார்க்காமல், அது ஒரு பெரும் போர் என அவர் வர்ணித்தார். இந்தத் தேர்தல் என்பது சமூக நீதிக்கும் - சமூக அநீதிக்கும் இடையே நடக்கும் போர். தமிழ் மொழிக்கும் - இந்தி திணிப்புக்கும் இடையே நடக்கும் போர். ஒட்டுமொத்தமாகச் சொன்னால், இது தமிழ்நாட்டிற்கும் - டெல்லிக்கும் இடையிலான போர்.
அரசியலை வெறும் பொழுதுபோக்காகப் பார்ப்பவர்களுக்கு மக்கள் பணியில் இடமில்லை என்றும், வரும் தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று உதயசூரியன் சின்னத்தை அரியணையில் ஏற்ற இளைஞரணியினர் முன்கள வீரர்களாகச் செயல்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.



