• vilasalnews@gmail.com

தமிழக அரசியல்: திமுக - காங்கிரஸ் கூட்டணி நீடிக்குமா? புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை என்ன?

  • Share on

தமிழக அரசியலில் நீண்டகாலமாக ஒரு வலுவான பிணைப்பைக் கொண்டுள்ள திமுக - காங்கிரஸ் கூட்டணி, தற்போது தொகுதிப் பங்கீடு மற்றும் வாக்கு வங்கி தொடர்பான விவாதங்களால் ஒருவித நெருக்கடியைச் சந்தித்து வருகிறது. கூட்டணி முறிவு என்ற பேச்சுக்கள் எழும் அளவிற்கு நிலமை தீவிரமடைந்துள்ள நிலையில், காங்கிரஸின் தற்போதைய பலம் குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ளன.


தமிழக காங்கிரஸ் கட்சியின் 1980-களின் செல்வாக்கையும் இன்றைய நிலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அது மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசமாகவே தெரிகிறது. 1977-ல் தனித்துப் போட்டியிட்ட காங்கிரஸ் 20.8% வாக்குகளைப் பெற்று அசைக்க முடியாத சக்தியாக இருந்தது. அதன் விளைவாகவே 1980 சட்டமன்றத் தேர்தலில் திமுகவிற்கு நிகராக சரிபாதி தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட்டது.


ஆனால், 2014 லோக்சபா தேர்தலில் தனித்துப் போட்டியிட்டபோது, காங்கிரஸின் வாக்குச் சதவீதம் வெறும் 4.3% ஆகச் சரிந்தது. கட்சிக்குள் ஏற்பட்ட பிளவுகளும், அடிமட்டக் கட்டமைப்பில் ஏற்பட்ட தொய்வும் இந்தக் பின்னடைவுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.


அரசியல் விமர்சகர்களின் கணிப்புப்படி, காங்கிரஸின் வாக்கு வங்கி குறித்து சில கசப்பான உண்மைகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழகத்தில் காங்கிரஸின் கோட்டையாகக் கருதப்படும் கன்னியாகுமரி மாவட்ட வாக்குகளைக் கழித்துவிட்டுப் பார்த்தால், தமிழகத்தின் பிற பகுதிகளில் அக்கட்சியின் செல்வாக்கு வெறும் 1% மட்டுமே இருப்பதாகக் கூறப்படுகிறது.


ஆந்திரப் பிரதேசத்தில் காங்கிரஸின் வாக்குச் சதவீதம் 1.72% ஆகச் சுருங்கியது போன்ற ஒரு நிலைதான், தமிழகத்திலும் நிலவுவதாக திமுக தரப்பில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. தற்போதைய அரசியல் சூழலில் திமுக ஒரு அசுர பலம் கொண்ட இயக்கமாக உருவெடுத்துள்ளது. இதனால், திமுகவிற்கு காங்கிரஸ் தேவையா அல்லது காங்கிரசுக்கு திமுக தேவையா? என்ற கேள்வி உரக்க ஒலிக்கத் தொடங்கியுள்ளது.


காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் திமுகவே நேரடியாக நின்றால், கூடுதலாக குறைந்தபட்சம் 6 சட்டமன்றத் தொகுதிகளில் எளிதாக வெற்றி பெற முடியும் என திமுக தலைமை கருதுகிறது. பாஜகவை எதிர்ப்பதற்கான ஒரு'தேசிய முகம்'தேவை என்பதற்காக மட்டுமே காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்கிறது. 'இந்தியா'கூட்டணியின் அங்கமாக இருப்பதாலேயே திமுக இணக்கமான போக்கைக் கடைபிடிக்கிறது.


ஒரு காலத்தில் சம பலத்துடன் கைகோர்த்த இந்தக் கூட்டணி, இன்று ஒரு தரப்பின் பெரும்பலம் மற்றும் மற்றொரு தரப்பின் பெயரளவிலான செல்வாக்கு என்ற நிலையில் இயங்கிக் கொண்டிருக்கிறது. தொகுதிப் பங்கீட்டில் திமுக எடுக்கப்போகும் கடுமையான நிலைப்பாடே, இக்கூட்டணியின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.

  • Share on

தலைவர் சொல்லிட்டாரு.. இனி பேச்சே கிடையாது - காங்கிரஸை அதிரவைத்த திமுக!

2026 தேர்தல் வெறும் போர்க்களமல்ல; டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்குமான நேரடிப் போர்– உதயநிதி ஸ்டாலின் அதிரடி!

  • Share on