தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான அரசியல் போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இன்று காலை தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 1.31 கோடி பெண்களின் வங்கிக் கணக்குகளில் திடீரென ரூபாய் 5,000 வரவு வைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி மாதத்திற்கான உரிமைத்தொகை 1,000 ரூபாயுடன், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணம் 2,000 ரூபாய், மேலும் 'கோடைக்கால சிறப்புத் தொகை' என்ற பெயரில் கூடுதலாக 2,000 ரூபாய் என மொத்தம் 5,000 ரூபாயை முதல்வர் ஸ்டாலின் அரசு வழங்கியுள்ளது.
முதல்வரின் இந்த அதிரடி நடவடிக்கையை 'தேர்தல் தோல்வி பயம்' என விமர்சித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது எக்ஸ் தளத்தில் விமர்சனங்களை எழுப்பியுள்ளார்.
28 மாதங்களாக இழுத்தடித்த ஸ்டாலின் அரசு, இப்போது கோடைக்கால சிறப்பு நிதி என்கிறது. அப்படியானால் 2024, 2025-ல் தமிழ்நாட்டிற்கு கோடைக்காலமே வரவில்லையா? சிறுமி முதல் மூதாட்டி வரை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகத்தை மாற்றிவிட்டு, இப்போது தேர்தல் நேரத்தில் பணம் கொடுத்து 'பேட்ச் ஒர்க்' செய்கிறார்கள். விடியா ஆட்சியால் விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஒவ்வொரு குடும்பமும் சுமார் 3.50 லட்சம் ரூபாயை இழந்துள்ளது. இதை அதிமுக அம்பலப்படுத்தி வருவதால் வந்த பயமே இந்த அறிவிப்பு.
அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 'குல விளக்குத் திட்டம்' மூலம் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் தகுதி பார்க்காமல் மாதம் ரூ. 2,000 வழங்கப்படும் என எடப்பாடியார் உறுதி அளித்துள்ளார்.



