தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திமுக மற்றும் அதிமுக-வை கடுமையாக விமர்சித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக சேலத்தில் இன்று நடைபெற்ற கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். ஆனால், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாததால், தொழிலாளி ஒருவர் மயக்கமடைந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு சுமார் 5,000 பேருக்கு மட்டுமே காவல்துறை அனுமதி அளித்திருந்தது. ஆனால், சேலம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். கூட்டத்தை முறைப்படுத்த 'பாக்ஸ்' வடிவிலான தடுப்புகள் அமைக்கப்பட்டிருந்தும், கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தால் அவை பயனின்றி போயின.
ஒரே அடையாள அட்டையை பலரும் வண்ணப் பிரதிகள் எடுத்துக்கொண்டு வந்ததால், நுழைவு வாயில்களில் குழப்பம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பலரும் உள்ளே நுழைந்ததால் கடும் நெரிசல் உருவானது. விஜய்யின் வருகைக்காக காலை முதலே சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மக்கள் காத்திருந்தனர். அமர்வதற்கு நாற்காலிகள் இல்லாததால், பெண்கள் உள்ளிட்ட பலரும் சுட்டெரிக்கும் வெயிலில் நின்றவாறே காத்திருக்க நேரிட்டது.
விஜய் மேடையில் பேசிக்கொண்டிருந்த போதே கூட்ட நெரிசல் மற்றும் வெயிலின் தாக்கம் காரணமாக பலருக்கு மயக்கம் ஏற்பட்டது. அங்கு அமைக்கப்பட்டிருந்த இரண்டு மருத்துவ முகாம்களில் முதலுதவி வழங்கப்பட்டாலும், அது போதுமானதாக இல்லை. குடிநீர் வசதிகளும் தட்டுப்பாடாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த சூரஜ் (37) என்ற தொழிலாளி கூட்டத்தில் சிக்கி மயக்கமடைந்தார். சேலத்தில் உள்ள வெள்ளிப் பட்டறையில் வேலை பார்த்து வந்த அவர், விஜயைப் பார்ப்பதற்காக ஆர்வத்துடன் வந்திருந்தார். மயக்கமடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அந்த சோக வடுக்கள் மறைவதற்கு முன்பே, சேலத்திலும் அதே போன்ற பாதுகாப்பு குளறுபடிகள் நிகழ்ந்திருப்பது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
மக்கள் மயக்கமடைந்து விழுந்த நிலையிலும், மேடையில் விஜய் தனது பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்ததும், அங்கிருந்த தொண்டர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படாததும் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் நெருங்கும் வேளையில், தவெக-வின் இத்தகைய கூட்ட மேலாண்மை தோல்விகள் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.



