தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எனப் பல்வேறு தரப்பினரும் கூட்டணிக் கணக்குகளில் பிஸியாக இருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது தேர்தல் நிலைப்பாட்டைத் தெளிவாகத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் இந்தியா டுடே ஊடகத்திற்கு அளித்த பிரத்யேகப் பேட்டியில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சியின் வியூகம் குறித்து விஜய் வெளிப்படையாகப் பேசினார்.
தேர்தல் அறிவிப்பிற்கு முன்போ அல்லது தேர்தல் முடிந்த பின்போ எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்பதில் தவெக உறுதியாக உள்ளது. இந்தியா கூட்டணி அல்லது தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆகிய இரு பெரும் தேசியக் கூட்டணிகளிலும் இணையப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக மக்கள் தற்போது ஒரு மாற்றத்திற்காகக் காத்திருப்பதாகவும், அவர்களின் ஆதரவுடன் தவெக வெற்றி பெறுவது உறுதி என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் தவெக-வை தங்கள் பக்கம் இழுக்க முயற்சிப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தனித்துப் போட்டியிட்டு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம் என விஜய் கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



