தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. அதிமுக கூட்டணி ஒருபுறம் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ள நிலையில், திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் வரும் 22-ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தொடங்குகிறது.
இந்நிலையில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் வைகோ தலைமையிலான மதிமுக, இந்த முறை தாங்கள் போட்டியிட விரும்பும் 16 தொகுதிகள் அடங்கிய உத்தேசப் பட்டியலைத் தயார் செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த காலங்களில் வென்ற சில தொகுதிகளை விட்டுக்கொடுத்துவிட்டு, புதிய வியூகங்களுடன் மதிமுக களமிறங்கத் திட்டமிட்டுள்ளது.
அதன் படி, விருதுநகர், சிவகாசி, மதுரை தெற்கு, பாளையங்கோட்டை, கடையநல்லூர், சாத்தூர், கோவில்பட்டி, சிங்காநல்லூர், பல்லடம், கிணத்துக்கடவு, மொடக்குறிச்சி, திருச்சி கிழக்கு, மணப்பாறை, கடலூர், புவனகிரி, சீர்காழி (தனி) ஆகிய தொகுதிகளை மதிமுக குறிவைக்கிறது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற வாசுதேவநல்லூர் மற்றும் அரியலூர் ஆகிய தொகுதிகளை இந்த முறை மதிமுக கேட்கப்போவதில்லை எனத் தெரிகிறது.
விருதுநகர் அல்லது சிவகாசியில் சிப்பிபாறை ரவிச்சந்திரன், திருச்சி கிழக்கு அல்லது மணப்பாறையில் டாக்டர் ரொக்கையா, கடலூர் அல்லது புவனகிரியில் செந்தில் அதிபன், கோவில்பட்டியில் விநாயகம் ரமேஷ் உள்ளிட்டோரை வேட்பாளராக களம் இறக்கும் முடிவில் மதிமுக தலைமை இருக்கிறதாம்.
கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட மதிமுக, இந்த முறை தனிச் சின்னத்தில் போட்டியிட ஆர்வம் காட்டி வருகிறது. 16 தொகுதிகள் கேட்டாலும், இறுதியில் திமுக எத்தனை இடங்களை ஒதுக்கும் என்பதுதான் தற்போதைய அரசியல் மில்லியன் டாலர் கேள்வி.



