தமிழகத்தில் வரவிருக்கின்ற சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதற்கு தடை விதிக்கலாம் என்ற சூழல் நிலவியது. இதை முன்கூட்டியே கணித்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பயனாளிகளுக்கு மே மாதம் வரையிலான தொகையை ஒரே தவணையாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான மாதாந்திர உரிமைத் தொகை தலா ரூ. 3,000 மற்றும் கோடைக்கால சிறப்புத் தொகுப்பாக ரூ. 2,000 என மொத்தம் 5,000 ரூபாய் 1.31 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் இன்று காலை வரவு வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளைச் சுட்டிக்காட்டி இந்தத் திட்டத்தை முடக்க சில தரப்பினர் திட்டமிட்டிருந்த நிலையில், அரசு இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. அடுத்த முறை 'திராவிட மாடல் 2.0' ஆட்சியில், தற்போது வழங்கப்படும் ரூ. 1,000 உரிமைத் தொகை 2,000 ரூபாயாக உயர்த்தப்படும் என முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார்.
சமீபத்தில் மகாராஷ்டிர மாநில உள்ளாட்சி தேர்தலின் போது பெண்களுக்கு வழங்கப்பட்ட நிதியுதவிக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், இலவச திட்டங்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் பாஜக தரப்பில் தொடரப்பட்ட வழக்கையும் சுட்டிக்காட்டி, தமிழகத்திலும் உரிமைத் தொகைக்கு தடை கோரப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
யார் தடை ஏற்படுத்தினாலும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டேன். இது எனது சகோதரிகளுக்கு நான் கொடுத்த உறுதிமொழி என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.



