அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, தவெக தலைவர் விஜய் குறித்து சில அதிரடித் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
விளாத்திகுளத்தில் தவெக-விலிருந்து விலகி 500-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்த விழாவில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில்:-

விஜய்யின் கடந்த கால நிகழ்வுகளையும் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டையும் கடுமையாகச் சாடினார்.
மெர்சல் படம் வெளியாவதில் விலங்குகள் நல வாரியச் சான்றிதழ் தொடர்பான சிக்கல் நீடித்தபோது, தீபாவளி ரிலீஸ் பாதிக்கப்படும் சூழல் உருவானது. அப்போது, நடிகர் விஜய் உதவி கேட்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க வந்தார்.
"விஜய் ஏதோ 10 நிமிடம் வந்து பேசிவிட்டுச் செல்லவில்லை. அந்தப் பிரச்சனைக்காக 3 மணி நேரம் காத்திருந்து எடப்பாடியாரைச் சந்தித்தார்," என்று கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை தினமாக இருந்தாலும், விஜய்யின் வேண்டுகோளை ஏற்று எடப்பாடி பழனிசாமி உடனடியாக டெல்லி அதிகாரிகளுடன் பேசி, இரவோடு இரவாகப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டதாகக் குறிப்பிட்டார்.

"அன்று உதவியதற்காக 'வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருப்பேன்' என்று கூறிய விஜய், இன்று அதிமுக பெயரை உச்சரிக்கவே பயப்படுகிறார்," என கடம்பூர் ராஜூ ஆதங்கத்துடன் தெரிவித்தார்.
விஜய் ஆரம்பித்துள்ளது 'வெற்றிக் கழகம்' அல்ல, அது ஒரு 'வெற்று கழகம்'. விஜய்க்கு அரசியல் செட் ஆகாது. அவர் மீண்டும் நடிக்கச் சென்றால், அவரது படங்கள் எந்தப் பிரச்சனையும் இன்றி வெளியாக அதிமுக உறுதுணையாக இருக்கும். விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகருக்குத் தமிழகத்தின் அரசியல் களநிலவரம் நன்றாகத் தெரியும். ஆனால், அவர் பேச்சை விஜய் கேட்கும் நிலையில் இல்லை என தவெக-வின் அரசியல் செயல்பாடுகளை விமர்சித்த கடம்பூர் ராஜூ,

தன்னுடைய செல்போனில், விஜய் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஒன்றாக இருக்கும் அந்தப் பழைய புகைப்படத்தைக் காட்டித் தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தினார்.



