தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் செங்கோட்டையனின் கருத்துகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது தவெக மற்றும் அக்கட்சியின் நிர்வாகிகள் குறித்து அவர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார்.
சமீபத்தில் செங்கோட்டையன் தெரிவித்த கருத்துகள் குறித்துப் பேசிய செல்லூர் ராஜு, செங்கோட்டையன் ஒரு செல்லாத நோட்டு. இதனை எங்களது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியே தெளிவுபடுத்திவிட்டார். செல்லாத காசு என்ன பேசினாலும் அதனால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. ஒரு காலத்தில் எங்களுடன் இருந்தவர் என்பதால், அவரைப் பற்றிப் பேசுவது எங்களைப் பற்றியே பேசுவது போன்றது. ஆனால் தவெகவுக்குச் சென்ற அவரை, அந்தக் கட்சியினரே மதிப்பதில்லை; 'கிழவன்' எனக் கூறி ஒதுக்குகின்றனர், என்று சாடினார்.
ஆதவ் அர்ஜுனா குறித்துப் பேசிய அவர், ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சும் லாட்டரி குடும்பத்தில் இருந்து வந்த ஆதவ் அர்ஜுனாவுக்கு அதிமுகவைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது? ஏழை எளிய மக்களின் வாழ்வைச் சீரழித்த லாட்டரி முறையைத் தமிழகத்தில் ஒழித்தவர் புரட்சித் தலைவி ஜெயலலிதா. ஆனால் அந்தக் குடும்பத்தினர் இன்னும் பல மாநிலங்களில் லாட்டரி தொழிலை நடத்தி வருகின்றனர். மக்கள் பணியில் ஈடுபடாத இவர்களது பேச்சுகள் அரசியலில் எடுபடாது, என்றார்.
நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பேசிய செல்லூர் ராஜு:
விஜய்யை ரசிகர்கள் வேண்டுமானால் ரசிப்பார்கள், ஆனால் மக்கள் ஏற்க மாட்டார்கள். அவர் மக்களுக்காக இதுவரை என்ன போராட்டம் செய்திருக்கிறார்?ட்விட்டரிலும், ஊடகங்களிலும் பேசுவது மட்டுமே அரசியலாகாது. களத்தில் மக்கள் நிலையைப் பற்றி இவர்களுக்கு ஏதும் தெரியாது.
விஜய் வேண்டுமானால் கல்லூரிக்கு முதல்வராகலாம், நாட்டுக்கு முதல்வராக முடியாது. வரும் தேர்தலில் அதிமுக - திமுக இடையே தான் நேரடிப் போட்டி இருக்கும். மேலும், தமிழக அரசின் செயல்பாடுகள் குறித்தும், குறிப்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடுகள் மற்றும் இளைஞர்களின் வாழ்வாதாரச் சிக்கல்கள் குறித்தும் தனது கண்டனங்களைப் பதிவு செய்தார்.



