தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம், வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆரம்பகட்டமாக 10% முதல் 15% வரையிலான வாக்குகளைப் பெறக்கூடும் என டெல்லி பாஜக தலைமைக்கு அனுப்பப்பட்டுள்ள ரகசிய அறிக்கை தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாஜக-வின் உள்கட்சி அறிக்கையின்படி, விஜய்யின் அரசியல் வருகை குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு சக்தியைத் தேடும் மக்களின் கவனத்தை விஜய் ஈர்த்துள்ளதே இந்த 15% கணிப்புக்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. குறிப்பாக நகர்ப்புற இளைஞர்கள் மத்தியில் விஜய்க்கு நல்ல வரவேற்பு இருப்பதை பாஜக மேலிடம் ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அதே சமயம், இந்த ஆரம்பகட்ட எழுச்சி தேர்தல் நெருங்கும்போது சரிவைச் சந்திக்கலாம் என்றும் அந்த அறிக்கை எச்சரித்துள்ளது. அதற்கான முக்கிய காரணமாக நடிகர் விஜய்க்குத் தனிப்பட்ட செல்வாக்கு இருந்தாலும், ஒவ்வொரு வாக்குச்சாவடி நிலையிலும் கட்சியை வழிநடத்தத் தேவையான வலுவான அமைப்பு ரீதியான கட்டமைப்பு தவெக-விடம் தற்போது இல்லை.
திமுக மற்றும் அதிமுக-பாஜக போன்ற பலமான கூட்டணிகள் களத்தில் இறங்கி பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களை நடத்தும்போது, தவெக-வின் வாக்குகள் சிதற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது."யாருக்கு வாக்களித்தால் ஆட்சி அமையும்?" என்ற இறுதிநேர மனநிலைக்கு வாக்காளர்கள் வரும்போது, மக்கள் மீண்டும் பெரிய கூட்டணிகளை நோக்கியே நகர்வார்கள் என்று அந்த அறிக்கை கணிக்கிறது.
தற்போதைய சூழலில் விஜய்யின் வருகையை ஒரு சவாலாகப் பார்த்தாலும், தேர்தல் களத்தில் நீண்ட காலம் தாக்குப்பிடிக்கப் போவது பலமான கூட்டணிகளே என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். திமுக தனது வாக்கு வங்கியைத் தக்கவைக்க ஏற்கனவே மக்கள் நலத்திட்டங்களை முடுக்கிவிட்டுள்ளது.
விஜய்யின் வாக்குகள், எந்த கட்சி வாக்கு வங்கியில் இருந்து பிரியும் என்று கணிக்கமுடியாத சூழல் இருப்பதால் அது யாருக்குச் சாதகமாக முடியும் என்பது தேர்தல் நேரத்தில்தான் தெரியவரும். எது எப்படியோ, 2026 தேர்தல் களம் தமிழக வரலாற்றில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.



