• vilasalnews@gmail.com

தமிழகக் கோரிக்கைகள் புறக்கணிப்பு: மத்திய பட்ஜெட் குறித்து கொளத்தூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்புப் பேட்டி!

  • Share on

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டின் கோரிக்கைகள் முற்றிலும்  புறக்கணிக்கப்பட்டிருப்பது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தனது சொந்தத் தொகுதியான கொளத்தூரில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரித்தார்.


இன்று காலை கொளத்தூர் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், மக்கள் பயன்பாட்டிற்காகப் பல்வேறு புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார். 6 புதிய ரேஷன் கடைகள் திறந்து வைக்கப்பட்டன.புதிதாக அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் மற்றும் மறுவாழ்வு மையம் ஆகியவற்றைத் திறந்து வைத்தார்.தொடர்ந்து பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்த போது, மக்கள் அவரிடம் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட வேண்டும் என விருப்பம் தெரிவித்தனர்.


செய்தியாளர்கள் சந்திப்பின் போது, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்து முதல்வர் தனது அதிருப்தியைப் பதிவு செய்தார். "மத்திய பட்ஜெட் வழக்கத்தை விடப் பெரும் ஏமாற்றத்தையே அளித்துள்ளது. குறிப்பாகத் தமிழகத்திற்குச் சேர வேண்டிய நிதி மற்றும் புதிய திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் ஏதும் இல்லாதது, மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது. சட்டமன்றத் தேர்தலில் இதற்கு மக்கள் நிச்சயம் பதிலடி கொடுப்பார்கள்."


நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட 'புதிய அரசியல் எதிரிகளை' எப்படிப் பார்க்கிறீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு  பதிலளித்த ஸ்டாலின் : "அரசியலில் நான் யாரையும் எதிரியாகப் பார்ப்பதில்லை; மாற்றுக் கருத்து கொண்டவர்களாகவே பார்க்கிறேன்," என்று கூறினார்.


விஜய் தனது மாநாடுகளில் திமுகவைக் கடுமையாகச் சீண்டியிருந்தாலும், முதல்வர் அவரை ஒரு எதிரியாகக் கருதாமல் கடந்து சென்றிருப்பது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது.2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணிக் குறித்து விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கப்படும் என்றும் முதல்வர் உறுதி அளித்தார். இதற்காக டி.ஆர். பாலு தலைமையிலான குழு மீண்டும் அமைக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

  • Share on

தவெக தலைவர் விஜய்யை வறுத்தெடுத்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்!

2026-ல் விஜய்யின் தாக்கம் எப்படி இருக்கும்? பாஜக-வின் 'சீக்ரெட் சர்வே' சொல்வது என்ன?

  • Share on