மாநிலங்களவையில் மக்கள் நீதி மய்யம் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் மற்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இடையிலான வார்த்தைப் போர் தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் மொழி குறித்த அமைச்சரின் பழைய பேச்சு ஒன்றை மையமாக வைத்து இந்த விவாதம் வெடித்துள்ளது.
ராஜ்யசபாவில் தனதுப் பேச்சை நிகழ்த்திய நடிகர் கமல்ஹாசன், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை நோக்கி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். "தமிழ் மொழி பிச்சை எடுக்கக்கூட உதவாது" என்று அமைச்சர் கூறியதாகக் குறிப்பிட்ட கமல், அதற்குப் பதிலடியாக உரையாற்றினார்.
"தமிழ் பிச்சை எடுக்க உதவாது என்பது உண்மைதான், அதேபோல் அது திருடவும் உதவாது." "நிதியைத் திரட்ட நீங்கள் ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ பிச்சை எடுக்கலாம், ஆனால் தமிழன் யாரிடமும் பிச்சை எடுக்க மாட்டான்." "உங்கள் சாபங்களில் எங்களுக்கு நம்பிக்கையில்லை. உங்கள் வினை உங்களையே சுடும்" என ஆவேசமாக உரையாற்றினார்.
கமல்ஹாசனின் இந்த குற்றச்சாட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக மறுத்துள்ளார். தான் அப்படி ஒரு கருத்தைச் சொல்லவே இல்லை என்றும், தனது பேச்சு தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் பதில் வெளியிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நிகழ்வில், பெரியார் ஈ.வெ.ராமசாமி தமிழ் மொழி குறித்துக் கூறிய கருத்தையே தான் மேற்கோள் காட்டியதாகத் தெரிவித்தார். அது தனது சொந்தக் கருத்து அல்ல என்பதை அவர் தெளிவுபடுத்தினார்.
தான் பேசிய உண்மையான வீடியோ பதிவை வெளியிட்டு, கமல்ஹாசன் தவறான தகவலைச் சபையில் பதிவு செய்துள்ளதாகக் குற்றம் சாட்டினார்.அடிப்படைச் சரிபார்ப்பு இன்றி அமைச்சரின் பெயரில் தவறான செய்தியை வெளியிட்ட தனியார் செய்தி நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



