• vilasalnews@gmail.com

விஜயை ஏன் ஏற்க மறுக்கிறார்கள்... யாருக்கு மாற்று தவெக?

  • Share on

விஜய் திமுகவை எதிர்ப்பதெல்லாம் பிரச்சனையே இல்லை. ஆனால் விஜய் திமுகவை மட்டும் எதிர்ப்பது தான் பிரச்சனை. திமுக மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கத்தான் செய்கிறது.


வேங்கை வயல் சம்பவத்தில் பட்டியலின மக்களுக்கு ஏற்பட்ட அநீதி, தொடரும் ஆணவப் படுகொலைகள், சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தை முடக்கியது, ஜாதிக்கு எதிராக இருப்பது போல காண்பித்து பார்ப்பனர்களை மட்டும் எதிர்த்து இடைநிலை சாதிகளை ஊக்குவிப்பது போல் அவர்களின் விழாக்களில் கலந்துகொள்வது, சமுதாயத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக காவல்துறையை ஏவுவது போன்ற பல விஷயங்களில்  திமுகவிற்கு எதிராக பலரும் நிற்கின்றனர்.


ஆக, விஜய் என்ன சொல்லி அரசியல் செய்கிறார்? ஊழலை ஒழிப்பேன் என்று சொல்கிறார். அவர் கூறும் ஊழல் தமிழ்நாட்டில் ஏற்பட திமுக என்ற ஒற்றைக் கட்சி தான் காரணமா? 1967ஆம் ஆண்டு முதல் இன்றுவரை திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகள் தான் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இதில் திமுகவை விட அதிமுகதான் அதிக ஆண்டுகள் ( தோராயமாக 30 ) தமிழ்நாட்டினை ஆண்டிருக்கிறது என்றால், விஜய் திமுக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளையும் தானே எதிர்க வேண்டும்? ஏன் திமுகவை மட்டும் எதிர்கிறார்?


இதற்கு விஜய் தரப்பில் கூறும் பதிலோ, திமுக ஒரு ஆளுங்கட்சி. அதனால் தான் திமுகவை பற்றி விமர்சிக்க வேண்டிய தேவை இருக்கிறது. ஒருவேளை அதிமுக ஆண்டுகொண்டிருந்தால் அதிமுகவை விமர்சித்திருப்போம் என்கிறார்கள் விஜய் ரசிகர்கள். சரி, இந்த வாதத்தை ஏற்போம் என்றே வைத்துக்கொள்வோம். விஜய் கட்சி தொடங்கிய போது அதிமுக தனியாகத்தான் இருந்தது. ஆனால் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக, விஜயின் கொள்கை எதிரியான பாஜகவுடன் கூட்டணி வைத்திருக்கிறது.


அப்படியென்றால், வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக என்ற விஜயின் கொள்கை எதிரி தமிழகத்தில் நுழைய அதிமுக என்ற முக்கியமான கட்சியினை கூட்டு சேர்த்திருக்கிறது. இந்த இடத்தில், விஜய் அதிமுகவினை எதிர்த்துப் பேசவேண்டிய நிலையில் இருக்கிறார். ஆனாலும் பேசாமலே இருக்கிறார்.


இதெற்கெல்லாம் முத்தாய்ப்பாய் இன்று புதுச்சேரி கூட்டத்தில் பேசியிருக்கும் விஜய், ஆளுங்கட்சியான AINRC கட்சி பற்றி பேசாமல், அதன் எதிர்க்கட்சியான திமுகவைப் பற்றி விமர்சனம் செய்திருக்கார். அதாவது, தமிழ்நாட்டில் திமுகவை விமர்சிக்க காரணம் திமுக ஆளுங்கட்சி. புதுச்சேரியில் திமுகவை விமர்சிக்க காரணம் திமுக எதிர்க்கட்சி என்றவுடனே திமுகவை மட்டும் அவர் குறிவைத்து பேசுவது தெரிகிறது. இதில் ஆச்சர்யமான தகவல் என்னவென்றால், விஜய் விமர்சனம் செய்யாத புதுச்சேரி ஆளுங்கட்சி, விஜயின் கொள்கை எதிரி பிஜேபியுடன் கூட்டணி சேர்ந்துதான் புதுச்சேரியை ஆட்சி செய்துகொண்டிருகிறது.


செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து தவெகவிற்கு சென்றதெல்லாம் விமர்சனம் செய்வதற்கில்லை. அது அவர்கள் கட்சி நிலைப்பாடு. ஆனால் செங்கோட்டையன் இன்னமும் ஜெயலலிதாவை தன் அரசியல் குரு என்று கூறிக்கொள்வதும், விஜய் கட்சியின் முக்கியப் பொறுப்பாளர்கள் ஜெயலலிதா நினைவிடம் சென்று மரியாதை செய்வதெல்லாம் என்ன அர்த்தம்? ஊழல் கட்சி ஊழல் கட்சி என்று ஓயாமல் திமுகவைப் பார்த்து கத்தும் விஜய் அவர்களுக்கு, தமிழ்நாட்டில் ஊழல் புரிந்ததற்காக உச்ச நீதிமன்றமே சிறைக்கு அனுப்பிய ஊழல்வாதி ஜெயலலிதா தான் என்ற தகவல் தெரியாதா? இல்லை, ஒருவேளை துரைமுருகன் திமுகவில் இருந்து தவெக சென்றால், கருணாநிதியின் கல்லறைக்குச் சென்று அஞ்சலி செலுத்தி இருப்பீர்களா?


விஜய்க்கு தொண்டர்கள் என்று யாரும் இல்லை; விஜய்க்கு ரசிகர்கள் மட்டும் தான். தொண்டர்கள் தலைவர்கள் பற்றி விவாதிப்பர்; ஆனால் ரசிகர்கள் தலைவர் சொல்வதை அப்படியே கேட்பர். திருப்பரங்குன்றம் விஷயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். விஜயின் அரசியல் எதிரி மற்றும் கொள்கை எதிரி இருவருமே மோதிக்கொள்கின்றனர். இதில் விஜய் கருத்து சொல்லாதவரை இருவரில் யாருக்காக வாதாடுவது, யாரை விமர்சிப்பது என்று எந்த தவெக நண்பர்களுக்கும் தெரிவதில்லை. ஏனென்றால் விஜயிடம் திமுக எதிர்ப்பு தவிர வேறு சிந்தாந்தங்கள் இல்லை. 


இப்படித்தான் சீமான் என்ற ஒருவர் வந்தார். திராவிடம் தான் நம் எதிரி என்றார். திராவிடக் கட்சிகளை எதிர்ப்பேன் என்றார். சிறிது நாளில், 2016ல் தமிழகத்தின் பிரதான கட்சியான அதிமுகவுடன் கூட்டணி வைத்தார். ஏன் அதிமுக ஒரு திராவிடக் கட்சி என்று சீமானுக்குத் தெரியாதா? அவர் திராவிடத்தை எதிர்க்கவில்லை, திமுகவைத் தான் எதிர்த்தார் என்று மக்களுக்குப் புரிய வருடங்கள் ஆனது. 


மாற்று அரசியல் செய்யவேண்டும் என்றால் இங்கே ஊழல் செய்த இரண்டு கட்சிகளையும் விஜய் எதிர்க்க வேண்டும், ரசிக மனோபாவத்தில் இருந்து அவர்களைத் தொண்டர்களாக அரசியல்படுத்த வேண்டும், மிக நீண்ட களப்பணி ஆற்ற வேண்டும். இதெல்லாம் செய்யாமல் திமுகவை மட்டும் ஒரு கட்சி எதிர்க்குமேயானால் அக்கட்சியினை யாரும் விரும்ப மாட்டார்கள். 


நன்றி : நவீன் ( கட்டுரையாளர் ) 

  • Share on

விஜய்யின் ஸ்கெட்ச்.. மாநாட்டில் ஓபன் டாக்... பதற்றமாகும் தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சி!

கருப்பு டூ வெள்ளை : சிபிஐ வளையத்தில் விஜய்... மிரட்டலா? சமரசமா? ஒரு அதிரடி ரிப்போர்ட்!

  • Share on