அரசியலில் யாரும் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று சொல்வார்கள். மக்கள் பிரச்சினைகளில் ஆளும் கட்சியுடன் மோதும் அரசியல் கட்சிகள் கூட தேர்தல் நேரத்தில் எல்லாவற்றையும் மறந்துவிட்டு அவர்களுடன் கூட்டணி அமைத்துக் கொள்வார்கள். இதற்கு கடந்த கால தேர்தல்களில் அமைந்த கூட்டணிகளே சாட்சி ஆகும். தமிழ்நாட்டில் இன்றைக்கு திமுகவும், பாஜகவும் நோ் எதிரும் புதிருமான கட்சி தான். ஆனால், 2001 ஆம் ஆண்டு நடந்த சட்டசமன்ற தேர்தலில் இந்த 2 கட்சிகளும் கூட்டணி அமைத்திருந்தன.
அதே போல், இன்றைக்கு திமுக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள் அப்போது அதிமுக கூட்டணியில் இருந்தன. பாமகவும், தமாகாவும் அதே கூட்டணியில்தான் அங்கம் வகித்தன. மூன்று முனை போட்டி நிலவிய அந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது.
2006 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நிலைமை அப்படியே மாறியது. அதிமுக கூட்டணியில் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இடம்பெற்றிருந்தன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள் இடம்பெற்றிருந்தன. அப்போது புதிதாக உதயமான தேமுதிக வும், பாஜக வும் தனித்து போட்டியிட்டன. 4 முனைப்போட்டி நிலவிய இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.
2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் நிலைமை மாறியது. அதிமுக கூட்டணியில் கடந்த தோ்தலில் தனித்து போட்டியிட்ட தேமுதிகவும், இரண்டு கம்யூனிஸ்டுகள், மனிதநேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி ஆகியவை இடம்பெற்றிருந்தன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. பாஜக தனித்து களம் கண்டது. மும்முனை போட்டியாக மாறிய இந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. 2010 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியை தொடங்கிய சீமான், இந்த தேர்தலில் அதிமுகவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.
2016 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தல் நிலைமை படு வித்தியாசமாக இருந்தது. அதிமுக தனித்து போட்டியிட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருந்தது. தேமுதிக தலைமையில் மதிமுக, இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள், தமாகா, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்டவை இணைந்து மக்கள் நல கூட்டணி என்று ஒரு புதிய கூட்டணியை உருவாக்கின. பாமக, பாஜக, சீமானின் நாம் தமிழர் கட்சிகள் தனித்து போட்டியிட்டன. 6 முனைப்போட்டி நிலவிய இந்தத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட அதிமுக வெற்றி பெற்றது.
2021 ஆம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகள். மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இருந்தது. டிடிவி தினகரனின் அமமுக, நடிகா் கமலின் மக்கள் நீதி மையம் ஆகிய கட்சிகள் தனித்தனி கூட்டணியை அமைத்தன. சீமான் தனித்து போட்டியிட்டார். 5 முனைப் போட்டியான இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.
இவ்வாநு, தேர்தலுக்கு தேர்தல் கூட்டணிகள் மாறிக்கொண்டே வந்திருக்கின்றன. அந்த வகையில், தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழ்நிலையில் தமிழக தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி விட்டது. அரசியல் கட்சிகள் இடையே கூட்டணி பேச்சுவார்த்தை திரைக்கு பின்னும், முன்னும் தொடங்கிவிட்டன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக,விடுதலை சிறுத்தைகள், இரண்டு கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நீடித்து வருகிறது. இருந்தாலும் தற்போது திமுக வுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி குரல் ஒலிப்பது, ஆட்சியில் பங்கு என்று விடுதலை சிறுத்தைகள் குரல், கட்சியின் அங்கீகாரம் பெற கூடுதல் இடங்கள் வேண்டும் என்று மதிமுக குரல் எழுப்புவது போன்ற எதிர்ப்புகளும் திமுக கூட்டணியில் எழுந்துள்ளன. தற்போது கூடுதலாக கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் திமுக கூட்டணியில் இணைந்துள்ளது.
அதேபோல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக இணைந்திருந்தாலும் தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்தகால தேர்தலை போலவே தனித்து போட்டி என்பதில் உறுதியாக இருக்கிறது. நடிகர் விஜய்யின் தவெக தேர்தல் களத்திற்கு புதிது. திமுக - பாஜக வுடன் கூட்டணி அமைக்க மாட்டோம் என்று கடந்த செயற்குழு கூட்டத்தில் விஜய் திட்டவட்டமாக அறிவித்து விட்டார். அப்படியென்றால் அதிமுக வுடன் விஜய் கூட்டணி அமைப்பாரா? என்ற கேள்வி எழுகிறது. ஏற்கனவே அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்டதால், அதிமுகவுடன், தவெக கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்பும் இல்லை என்று தெரிகிறது. ஆனால் விஜய்தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று தவெக தெளிவாக கூறியுள்ளதால் அவர்கள் தலைமையில் புதிய அணி உருவாகத்தான் வாய்ப்பு இருக்கிறது. எனவே அந்த கட்சி தங்களது தலைமையில் ஒரு மெகா கூட்டணி அமைக்க திட்டமிட்டு வருகிறது.
பாமக வில் ஏற்பட்டுள்ள பிரச்சினை முடிவுக்கு வந்த பிறகுதான் அந்த கட்சி எந்த கூட்டணியில் இடம் பெறப்போகிறது என்பது தெரியும். தேமுதிக தனது கூட்டணி முடிவை அடுத்த ஆண்டு அறிவிப்பதாக சொல்லி இருக்கிறது. தேர்தல் கூட்டணி கணக்குகள் ஒருபுறம் பரபரத்து கொண்டு இருந்தாலும், ஆளுங்கட்சியான திமுக தேர்தல் பணியை முதலில் தொடங்கிவிட்டது.
200 தொகுதிகளில் வெல்வோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரைத்து, தேர்தல் பணியை துவங்கி உள்ளார். அதே போல் எதிர்க்கட்சியான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் சட்டமன்ற தொகுதிவாரியாக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போதைய சூழ்நிலையில் வரும் சட்டசபை தேர்தலில் தவெக விஜய்யின் அறிவிப்பு, சீமானின் தனித்து போட்டி என்ற விடாப்படி கொள்கை ஆகியவற்றால் 4 முனை போட்டி நிலவுவது உறுதியாகி இருக்கிறது.
இந்த சூழலில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கூட்டணி எப்படி அமையப் போகிறது? என்பது குறித்த வெளியாகும் தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் கூட்டணியில் சேர சீமான் மற்றும் விஜய்க்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
2026 ல் தமிழக மக்கள் ஒற்றைக் கட்சி ஆட்சியை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். திமுகவை தோற்கடிக்க அனைத்து ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளும் அதிமுகவுடன் கைகோர்க்க வேண்டும். ஒத்த கருத்துடைய கட்சிகள் எங்களுடன் கூட்டணிக்கு வரலாம் என்ற கருத்து விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு பொருந்தும். இதுவரை தவெகவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. மக்களின் துன்பங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புரிந்து கொள்ளவில்லை. ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என்பதை பாஜக தலைமைக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் கூறவில்லை. அதிமுகவை பாஜக விழுங்கிவிடும் என திமுக கூட்டணி கட்சிகள் கூறி வந்ததற்கு பதிலளிக்கவே அப்படி பேசினேன். இவ்வாறு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், சீமான், விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு மீண்டும் விடுத்த அழைப்பால் அரசியல் களம் பரபரப்பாகி உள்ளது.



