• vilasalnews@gmail.com

அதிமுகவின் முக்கிய தலையை தட்டித் தூக்கிய திமுக... எடப்பாடி பழனிசாமிக்கு எதுவுமே தெரியாதா?

  • Share on

அதிமுக முன்னாள் அமைச்சரும் தற்போதைய அமைப்புச் செயலாளருமான அன்வர் ராஜா திமுகவில் இன்று இணைந்து இருக்கிறார். இன்று காலை அதிமுகவில் இணையப் போவதாக செய்தி வெளியான பின்பு தான், அதுவும் அண்ணா அறிவாலயத்துக்குச் சென்ற பின்பு  தான் அன்வர் ராஜா அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிசாமியால் நீக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தோ்தல் நெருங்கி வரும் இந்த சமயத்தில் அதிமுகவைச் சோ்ந்த ஒரு முக்கிய தலைவர் ஒருவர் திமுக தரப்புக்கு செல்ல இருப்பது கூட எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாதா? என அதிமுகவினரே கேள்வி எழுப்புகின்றனர். 


வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜகவுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் அதிமுக பொது செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி. அதே நேரத்தில் பாஜக கூட்டணியால் அதிமுகவில் இருக்கும் சில நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. 


குறிப்பாக ஜெயக்குமார், அன்வர் ராஜா உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமியிடம் நேரடியாகவே இது தொடர்பாக பேசி இருந்தனராம். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, எஸ்பி வேலுமணி உள்ளிட்டோரின் வற்புறுத்தலால் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததாக சொல்லப்படுகிறது. 


பாஜக கூட்டணியால் தான் தாங்கள் தோற்க நேரிட்டது என சில அதிமுக சீனியர்கள் வெளிப்படையாக பேசினர். குறிப்பாக ராயபுரம் தொகுதியில் தான் தோல்வியடைய காரணமே பாஜக தான் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பகிரங்கமாகவே பேசியிருந்தார். அதிமுக பாஜக கூட்டணி உடைந்ததை அதிகாரப்பூர்வமாக அறிவித்ததும் அவர்தான். 


ஆனால், தற்போது கடும் எதிர்ப்பையும் மீறி பாஜக கூட்டணியை எடப்பாடி அமைத்திருப்பைதை கண்டு முன்னாள் அமைச்சர்களும் மாவட்ட செயலாளர்களும் குறிப்பாக சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். அவர்களில் ஒருவர்தான் அன்வர் ராஜா. 


ஜெயலலிதாவிடம் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக இருந்த அன்வர் ராஜா.  ஓபிஎஸ், எடப்பாடி, சசிகலா மோதல் காரணமாக சற்று விலகி இருந்தார். அதிமுகவில் இருந்து ஓரம் கட்டப்பட்ட அவர் மீண்டும் அதிமுகவுக்கு வந்த நிலையில் அவருக்கு அமைப்பு செயலாளர் பதவி தரப்பட்டது. 


இந்த நிலையில் பாஜக கூட்டணி குறித்து தனது எதிர்ப்பை அவ்வப்போது தொடர்ந்து பதிவு செய்து வந்தார் அன்வர் ராஜா. அவை அன்வர் ராஜாவின் தனிப்பட்ட கருத்து என அதிமுக தலைமை விளக்கியது . இந்த நிலையில் இன்று காலை அன்வர் ராஜா திமுகவில் இணையப் போவதாக தகவல் கசிந்தது. இது அதிமுக தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 


தொடர்ந்து சிறிது நேரத்திலேயே அன்வர் ராஜா அண்ணா அறிவாலயம் சென்ற பிறகு அவர் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார். இந்த நிலையில் தான், அன்வர் ராஜா திமுகவில் சேரும் தகவல் கடைசி நேரத்திற்கு சற்று முன்பு தான் வெளியே தெரிந்ததாகவும், அதனால்தான் அவசர அவசரமாக அன்வர் ராஜாவை எடப்பாடி பழனிச்சாமி கட்சியை விட்டு நீக்கி இருக்கிறார் என்கின்றனர். 


திமுக தரப்பில் தகவல் தொழில்நுட்ப பிரிவை கையில் வைத்திருக்கும் அமைச்சர் அன்வர் ராஜாவுடன் ரகசியமாக பேச்சு நடத்தி வந்ததாகவும் அவரது ஏற்பாட்டின் பேரிலே அன்வர் ராஜா திமுகவில் இணைந்திருக்கிறார் என்கின்றனர். அதே நேரத்தில் கட்சியின்  முக்கிய நிர்வாகிகள் என்ன செய்கிறார்கள் என்று கூட கணிக்க முடியாத அளவுக்கு எடப்பாடி பழனிசாமி பலவீனமாக இருப்பதாக அதிமுகவினரே குற்றம் சாட்டுகின்றனர். 


பலமான கூட்டணி, தனித்து ஆட்சி என கூறிவரும் எடப்பாடி பழனிசாமி தனது கட்சி நிர்வாகிகளை கூட கட்டுப்படுத்த முடியவில்லை என்ற விமர்சனமும் எழுந்திருக்கிறது. தேர்தல் நேரத்தில் பல ஆண்டுகளாக அதிமுகவில் பயணித்த முக்கிய தலைவர் ஒருவர் எதிர்முகாமுக்கு செல்வது கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் எனவும், அவரை பின்பற்றி மேலும் பல முன்னாள் அமைச்சர்களும் நிர்வாகிகளும் திமுக தரப்பில் தஞ்சம் அடையலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளா்கள்.

  • Share on

தொடர் கண்காணிப்பு... நிர்வாகிகளை களையெடுக்கும் அதிமுக!

அதிமுக கூட்டணியில் சீமான், விஜய்... இதுவே சாட்சி!

  • Share on