• vilasalnews@gmail.com

35 வருடங்களுக்குப் பிறகு திண்டுக்கல்லில் களம் காணப் போகும் சி.பி.எம்... யார் இந்த வேட்பாளர் சச்சிதானந்தம்?

  • Share on

தி‌முக கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை மற்றும் திண்டுக்கல் ஆகிய இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியின் சிட்டிங் திமுக எம்.பி. வேலுச்சாமி, கடந்த தேர்தலில் 5 லட்சத்து 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் எனப் பெயர் பெற்றார். எனவே இந்த முறையும் திமுக நேரடியாக திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் எனக் கட்சியினர் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டது.

ஏற்கனவே கடந்த 1989 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டது. அப்போது வரதராஜன் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அந்தத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் வேட்பாளர் என்.எஸ்.வி. சித்தன் வெற்றி பெற்றார். அதன் பின் தொடர்ந்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியை அதிமுக., திமுக., காங்கிரஸ் கூட்டணிகள் தான் வெற்றி பெற்று வந்தன. அதேசமயம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பழனி, திண்டுக்கல் ஆகிய சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த நிலையில், தற்போது 35 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தற்போது திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சி.பி.எம். போட்டியிடுகிறது.

திண்டுக்கல் தொகுதியில் வேட்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பாண்டி, பாலபாரதி, மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளரும், வாச்சாத்தி வழக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க தொடர்ந்து போராடி வந்த சண்முகம் ஆகியோரில் ஒருவர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சச்சிதாநந்தம் அறிவிக்கப்பட்டுள்ளார். யார் இந்த சச்சிதாநந்தம்?

53 வயதான இவர், கடந்த 37 ஆண்டுகளாக கட்சியின் உறுப்பினராக இருக்கிறார். அதேபோல 30 ஆண்டுகளாக கட்சியின் முழுநேர ஊழியராகவும் பணியாற்றி வருகிறார்.

பிஎஸ்சி., பட்டதாரியான இவர், கடந்த 1987ம் ஆண்டு இந்திய மாணவர் சங்கத்தில்(SFI) மாவட்ட துணை செயலாளராகவும், திண்டுக்கல் நகர தலைவராகவும் பணியாற்றியவர். 1992ம் ஆண்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் இணைந்து 1994 -2002 வரை மாவட்ட செயலாளராக, மாநில செயற்குழு உறுப்பினராக, மாநில துணை செயலாளராக பணியாற்றியுள்ளார்.

2004 -2007 வரை ஆத்தூர், ரெட்டியார்சத்திரம் ஒன்றியங்கள் இணைந்த கட்சியின் திண்டுக்கல் தாலுகா செயலாளராகவும், அதன்பின்பு ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 2007-2018 வரை தமிழ்நாடு விவசாய சங்கத்தில் மாவட்ட செயலாளர், மாநில துணை செயலாளர் மற்றும் அகில இந்திய கிசான் கவுன்சில் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். மக்களிடம் சரியாக அணுகும் முறை, அரசியல் அனுபவம், சிறந்த தலைமை பண்பு ஆகியவை இவரை 26 வயதிலேயே தேர்தலை நோக்கி நகர்த்தியிருக்கிறது.

26 வயதில் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம், காமாட்சிபுரம் ஊராட்சிமன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டு 1996-2006 வரை இரண்டு முறை மக்கள் பிரதிநிதியாக சிறப்பாக பணியாற்றியுள்ளார். கடந்த 2018ம் ஆண்டு முதல் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட செயலாளராக பணியாற்றி வருகிறார்.

  • Share on

10 தொகுதிகளில் வெற்றி, 10 தொகுதிகளில் நெருக்கடி - பாஜக தலைவர் அண்ணாமலை குறி இது தான்!

அவரே தான் இன்று இப்படி... வாரிசுக்காக ஒரு சீட் - வைகோவை சுற்றும் வாரிசு அரசியல் சர்ச்சை!

  • Share on