• vilasalnews@gmail.com
Vrushav Infotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

  • Share on

கோவில்பட்டி அருகே இடைச்செவல் கிராமத்தில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக அவரது உடலுக்கு சபாநாயகர், அமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இடைச்செவல் கிராமத்தை சேர்ந்தவர் கி.ராஜநாராயணன் (வயது 98). பிரபல எழுத்தாளரான இவர் கி.ரா. என்றும், கரிசல் இலக்கியத்தின் பிதாமகன் என்றும் அழைக்கப்பட்டார். இவர் தனது குடும்பத்துடன் புதுச்சேரியில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி கி.ராஜநாராயணன் வயது முதிர்வு காரணமாக புதுச்சேரியில் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு அந்த மாநில கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள் மரியாதை செலுத்தினார்கள்.

இதையடுத்து கி.ராஜநாராயணன் இறுதிச்சடங்கு அவரது சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் நடைெபறும் என்று தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும் அவருக்கு கோவில்பட்டியில் சிலை வைக்கப்படும் என்றும் தெரிவித்தார். 

இந்த நிலையில் கி.ராஜநாராயணன் உடல் ஆம்புலன்ஸ் மூலம் புதுச்சேரியில் இருந்து நேற்று  இரவு கோவில்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது. கூடுதல் பஸ் நிலையம் முன்பு அவரது உடலுக்கு தமிழ் எழுத்தாளர்கள் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் கி.ராஜநாராயணன் உடல் இடைச்செவலில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டது.

இன்று காலையில் கி.ராஜநாராயணன் உடலுக்கு தமிழக சட்டமன்ற சபாநாயகர் மு.அப்பாவு, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், எம்.பி.க்கள் கனிமொழி, வெங்கடேசன், எம்.எல்.ஏ.க்கள் மார்க்கண்டேயன், சதன்திருமலைக்குமார், ரகுராமன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ, கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன், தாசில்தார் அமுதா, துணை காவல் கண்காணிப்பாளர் கலைக்கதிரவன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், பிரமுகர்கள், பொதுமக்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.

பின்னர் கி.ராஜநாராயணன் உடல் ஊர்வலமாக குடும்பத்திற்கு சொந்தமான தோட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

கி.ராஜநாராயணன் 1922-ம் ஆண்டு இடைச்செவல் கிராமத்தில் பிறந்தார். 7-ம் வகுப்பு வரை மட்டுமே படித்து இருந்தாலும் அவரது எழுத்து திறமையால் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் சிறப்பு பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள், கிராமிய கதைகள் என தமிழ் இலக்கிய துறையில் முத்திரை பதித்தவர். கோபல்லபுரத்து மக்கள் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது கி.ரா.வுக்கு கிடைத்தது. மேலும் இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கிய சாதனை விருது, மனோன்மணியம் சுந்தரனார் விருது (2016-17-ம் ஆண்டு) உள்ளிட்ட பல்வேறு விருதுகள் கி.ரா.வை தேடி வந்தது குறிப்பிடத்தக்கது.

  • Share on
VrushaInfotech Logo

உங்கள் தொழில் முன்னேற்றத்திற்கு இணையதளம் வேண்டுமா? இப்போதே தொடர்பு கொள்ளுங்கள்

WWW.VRUSHAINFOTECH.COM

WEB DESIGN & DEVELOPMENT - SEO - DIGITAL MARKETING - CRM - MOBILE APP - BILLING SOFTWARE

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் - தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு

தூத்துக்குடியில் திடீர் கனமழை - மரம் சாய்ந்தன

  • Share on

அண்மை பதிவுகள்