தூத்துக்குடியில் பட்டப்பகலில் பெண்ணை மிரட்டி நகையைப் பறித்துச் சென்ற நபரை, காவல்துறை அதிகாரி ஒருவர் தனது சாமர்த்தியத்தால் சினிமா பாணியில் மடக்கிப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி கதிர்வேல் நகரைச் சேர்ந்த சிவகமலா (48) என்பவர் நேற்று மதியம் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மதியம் 3 மணியளவில், வீட்டின் சுற்றுச்சுவரை ஏறி குதித்து உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவன், திடீரென சிவகமலாவை கத்தி முனையில் மிரட்டியுள்ளான். கண் இமைக்கும் நேரத்தில் அவர் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்கத் தாலிச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடினான்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் விசாரணையைத் தொடங்கினர். அதே சமயம், விரல் ரேகை பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் பசும்பொன் நகர் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ஒரு வாலிபர், கத்தியைக் காட்டி மிரட்டி தன்னை பழைய பேருந்து நிலையத்தில் விடுமாறு கூறியுள்ளார். அந்த நபர் மீது சந்தேகம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பிரேம்குமார், பதற்றப்படாமல் சாமர்த்தியமாகச் செயல்பட்டார். கொள்ளையனைத் தனது வண்டியிலேயே ஏற்றிக்கொண்டு, ரகசியமாக சிப்காட் போலீசாருக்குத் தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்தவுடன் விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் முத்துமாலை மற்றும் தனிப்படை போலீசார், குறிப்பிட்ட இடத்தில் அந்த வாலிபரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்திய சோதனையில், சிவகமலாவிடம் பறிக்கப்பட்ட 7 பவுன் நகை இருப்பது உறுதி செய்யப்பட்டு மீட்கப்பட்டது.
தூத்துக்குடியில் பட்டப்பகலில் பெண்ணை மிரட்டி நகையைப் பறித்துச் சென்ற தென்காசி மாவட்டம் தேவிபட்டினம் பகுதியை சேர்ந்த சசிகுமார் (30), கடந்த 4 ஆண்டுகளாகத் தூத்துக்குடி டி.எம்.பி காலனியில் உள்ள தனது மாமியார் வீட்டில் மனைவி மீனா மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருவதும், சென்ட்ரிங் வேலை செய்து வருவதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றம் நடந்த 3 மணி நேரத்திற்குள்ளாகவே, மிகத் துரிதமாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்பட்டு குற்றத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்த சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துமாலை, பிரேம்குமார் மற்றும் காவலர்களுக்குத் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி மதன் மற்றும் ரூரல் டிஎஸ்பி சுதிர் ஆகியோர் தங்களது பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.




