• vilasalnews@gmail.com

அதிமுக ஒரு மூழ்கும் கப்பல்; பாஜகவிடம் அடகு வைக்கப்பட்டுவிட்டது - செல்வப்பெருந்தகை காட்டம்!

  • Share on

தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக அரசியல் சூழல் மற்றும் கூட்டணி குறித்து கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.


அதிமுக - பாஜக கூட்டணி குறித்துப் பேசிய அவர், இது ஒரு இயற்கைக்கு மாறான கூட்டணி என்றும், ஆரம்பத்திலிருந்தே மக்கள் இதனை நிராகரித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், அதிமுக ஒரு மூழ்கும் கப்பல். அதில் தெரியாமல் ஏறியவர்கள் கூட இப்போது கீழே இறங்கத் தொடங்கிவிட்டனர் என்று விமர்சித்தார்.


தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க திமுக தலைமையிலான 'இந்தியா' கூட்டணி வலிமையுடன் உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், என்.டி.ஏ கூட்டணி தமிழக மக்களைத் தலைகுனிய வைக்கும் செயல்களில் ஈடுபடுவதாகக் குற்றஞ்சாட்டினார்.


மோடியும் அமித்ஷாவும் தமிழக உரிமைகளைப் பறிக்கும் போதெல்லாம், அதற்குத் துணை நின்றவர்கள் அதிமுகவினர். தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சியே இருக்குமா அல்லது பாஜக அதனை முழுமையாக விழுங்கிவிடுமா என்பதுதான் தற்போதைய கேள்வி.


பீகாரில் நிதிஷ் குமாரை ஓரங்கட்டிவிட்டு பாஜக ஆட்சியைப் பிடிக்கத் துடிப்பது போலவே, தமிழகத்திலும் அதிமுகவை ஆக்கிரமிக்கப் பாஜக திட்டமிட்டுள்ளதாக அவர் எச்சரித்தார். மத்திய அரசிடம் தங்களைத் தற்காத்துக் கொள்ள அதிமுக தன் உரிமைகளைத் தாரைவார்த்து வருவதாகவும், 1996 தேர்தல் முடிவுகளைப் போன்றதொரு தோல்வியை அதிமுக இந்தத் தேர்தலிலும் சந்திக்கும் என்றும் அவர் கணித்தார்.


தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்துப் பேசிய செல்வப்பெருந்தகை, பெண்கள் வாழ்வதற்கு மிகவும் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என மத்திய அரசே சான்றிதழ் அளித்துள்ளது. வன்முறை எங்கு நடந்தாலும் கண்டிக்கத்தக்கது. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் தலித் மக்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.


ஜாதிய மோதல்களைத் தடுக்கத் தமிழக அரசு இன்னும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். செய்தியாளர் சந்திப்பிற்குப் பிறகு, நாங்குநேரி வன்முறைச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்காக அவர் சாலை மார்க்கமாகப் புறப்பட்டுச் சென்றார்.

  • Share on

இலவச ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிப்பு: தூத்துக்குடி மாணவர்களுக்கு ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!

நாய் கடி வாங்கும் பணியாளர்கள்... தூத்துக்குடியில் பரிதாபம்!

  • Share on